பங்குச் சந்தையில் நல்ல ஆதாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்கின்றனர். அதனை உறுதி செய்வது போல் பல சமயங்களில் பல நிறுவன பங்குகள் எதிர்பார்ப்புகளையும் தாண்டி முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு ஆதாயத்தை கொடுத்துள்ளது. அப்படியொரு பங்குதான் ஏராயா லைப்ஸ்பேஸ்.
ஸ்மால் கேப் பங்கான ஏராயா லைப்ஸ்பேஸ், கடந்த ஓராண்டில் மல்டிபேக்கர் ஆதாயத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 750 சதவீதத்துக்கு மேல் லாபத்தை கொடுத்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் சம்பாதித்து வருவது, புதிய ஆர்டர்களை பெற்று வருவது போன்றவை இதற்கு ஒரு முக்கிய காரணங்களாகும். நிறுவனத்தின் வளர்ச்சி கவரும் வகையில் இருப்பதால் முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனனர்.

மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து 6வது வர்த்தக தினமாக கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்நிறுவன பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்கியூட்டை எட்டியது. இந்நிலையில், தனது இயக்குனர்கள் குழு மற்றும் பங்குதாரர்கள் மற்றும் மும்பை பங்குச் சந்தை ஆகியவற்றின் ஒப்புதலை பெற்று விகாஸ் கார்க் மற்றும் விகாஸ் லைப்கேர் லிமிடெட் உள்ளிட்ட குறிப்பிட்ட தரப்பினருக்கு இரண்டு கோடியே எழுபது லட்சம் முழுமையாக மாற்றத்தக்க வாரண்ட்களை ஒதுக்குவதாக இந்நிறுவனம் அறிவித்தது.
இதனையடுத்து நேற்று மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து 7வது வர்த்தக தினமாக இந்நிறுவன பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்கியூட்டை எட்டியது. இந்நிலையில் இன்றும் மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்கியூட்டை தொட்டது. இன்று இப்பங்கின் விலை ரூ.6.55 உயர்ந்து ரூ.137.60ஆக இருந்தது. இந்நிறுவன பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கடந்த மாதம் ஸ்மார்ட் எலக்ட்ரானிக் டிக்கெட் வழங்கும் எந்திரம் உள்ளிட்ட விரிவான டிக்கெட் வழங்கும் சேவைக்காக தனது இந்திய துணை நிறுவனமான எபிக்ஸ்கேஷ் நிறுவனத்தை கேஎஸ்ஆர்டிசி தேர்ந்தெடுத்துள்ளது என்று இந்நிறுவனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகள் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவது இந்நிறுவனத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இது போன்ற காரணங்களால் இந்நிறுவன பங்கு குறுகிய காலத்தில் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
கடந்த ஓராண்டில் ஏராயா லைப்ஸ்பேஸ் நிறுவன பங்கின் விலை 756 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக 14,461 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 15,881 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
இந்நிறுவனத்தில் புரோமோட்டர்களை காட்டிலும் பொதுமக்களின் பங்கு அதிகமாக உள்ளது. இந்நிறுவனத்தில் புரோமோட்டர்கள் வசம் 35.2 சதவீத பங்குகளை உள்ளன அதேசமயம் பொதுமக்கள் வசம் இந்நிறுவனத்தின் 36.7 சதவீத பங்குகள் உள்ளன. அன்னிய முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் 26.83 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications