பங்குச் சந்தையில் ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் பங்குகள் மீது வர்த்தகம் நடைபெறுகிறது. எல்லா நிறுவன பங்குகள் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்க சாத்தியமில்லை. சில நிறுவன பங்குகள் விலை அதிரடியாக விலை உயரும் போது அந்த பங்குகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில் பங்குச் சந்தையில் கடந்த பல நாட்களாக ஏற்றம் கண்டு வரும் ஒரு மல்டிபேக்கர் பங்கு தற்போது லைம் லைட்டுக்கு வந்துள்ளது.அந்த மல்டிபேக்கர் பங்கு எம்ஐசி எலக்ட்ரானிக்ஸ்.
எம்ஐசி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் எல்இடி வீடியோ டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் மேம்பாடு, உயர்தர எலக்ட்ரானிக் தொலைத்தொடர்பு கருவிகள் தயாரிப்பு மற்றும் தொலைத்தொடர்பு சாப்ட்வேரின் மேம்பாடு ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது. தொடர்ந்து லாபத்தை சம்பாதித்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் சராசரி ஆண்டு லாப வளர்ச்சி 32.2 சதவீதமாக உள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்றும் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கு புதிய 52 வார உச்ச விலையான ரூ.78.39ஐ எட்டியது.
பங்குச் சந்தையில் கடந்த 14 தினங்களாக எம்ஐசி எலக்ட்ரானிக்ஸ் பங்கு விலை உயர்ந்து வருகிறது. இந்த காலத்தில் இப்பங்கின் விலை 59.6 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 180 நாட்களில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 114.71 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் இப்பங்கு விலை 210.42 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 5,428.79 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் மற்றும் வர்த்தக வளர்ச்சி நிலவரங்கள் முதலீட்டாளர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
எம்ஐசி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 2024 மார்ச் காலாண்டில் வருவாயாக ரூ.22.96 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்த நிறுவனம் நிகர லாபமாக ரூ.49.59 கோடி ஈட்டியுள்ளது. மேலும் கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.54.58 கோடியும், நிகர லாபமாக ரூ.61.84 கோடியும் ஈட்டியுள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு வாயிலான வருவாய் 2.24ஆக உள்ளது. அதேசமயம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு வாயிலான வருவாய் 2.79ஆக உள்ளது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications