மல்டிபேக்கர் பங்கான ஸ்ப்ரேக்கிங் லிமிடெட் (Sprayking Limited) முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்கு வழங்க உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பித்தளை உதிரிபாகங்களை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
1980ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பிட்டிங்ஸ், போர்ஜிங்களுக்கான உபகரணங்கள், டிரான்ஸ்பார்மர் பாகங்கள் உள்பட பித்தளை உதிரிபாகங்கள் மற்றும் பாகங்களை தயாரித்து உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

இந்நிறுவனம் அண்மையில் ஒரு புதிய வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான 25 டன் பித்தளை கம்பிகளுக்கு ஆர்டரை பெற்றது. இது இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வெளிப்படுத்துகிறது.
ஜாம்நகரில் இந்நிறுவனம் ஒரு அதிநவீன உற்பத்தி ஆலையை தொடங்கியுள்ளது. ஸ்ப்ரேக்கிங் லிமிடெட் நிறுவனத்தின் ஜாம்நகர் ஆலை அதன் உற்பத்தி திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்தியுள்ளது.
மல்டிபேக்கர் பங்கான ஸ்ப்ரேக்கிங் லிமிடெட் நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயத்தை அளித்து வருகின்றன. உதாரணமாக கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 1,600 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்திய பித்தளை உதிரிபாகங்கள் சந்தையில் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதே இதற்கு காரணம். மும்பை பங்குச் சந்தையில் 2023 ஜூன் 28ம் தேதியன்று இந்நிறுவன பங்கு விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.29க்கு சென்றது, இருப்பினும் இந்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதியன்று இந்நிறுவன பங்கு புதிய 52 வார உச்சமான ரூ.60.04ஐ எட்டியது. இருப்பினும் தற்போது இந்நிறுவன பங்கு விலை சற்று குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று இந்நிறுவன பங்கு விலை வர்த்தகத்தின் இடையே ரூ.40.55ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் ஸ்ப்ரேக்கிங் லிமிடெட் நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.200 கோடியை தாண்டியுள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
இந்த காலத்தில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 1,600 சதவீதத்துக்கு மேல் உயர்த்தியுள்ளது. ஸ்ப்ரேக்கிங் லிமிடெட் நிறுவனம் அண்மையில் தனது பங்குகளை 5:1 என்ற விகிதத்தில் பிரித்தது.
அதாவது ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கினை ரூ.2 முகமதிப்பு கொண்ட 5 பங்குகளாக பிரித்தது. இந்த சூழ்நிலையில், இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ப்ரேக்கிங் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் 2024 ஜூலை 1ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு வழங்குவது தொடர்பான பரிந்துரை மற்றும் ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் போனஸ் பங்கு வழங்கலாம் என்ற தகவல் இந்நிறுவன பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications