அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றது, ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள், அமெரிக்க பொருளாதார மந்த நிலை, ஏஐ தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் நடவடிக்கைகள், அமெரிக்க நிறுவனங்கள் ஐடி சேவைகளுக்கான செலவினங்களை குறைத்தது, மேக்ரோ பொருளாதார சூழல் உள்ளிட்டவை காரணமாக இந்தியா ஐடி நிறுவனங்களுக்கு 2025 ஆம் ஆண்டு சற்று சவாலான ஆண்டாகவே இருந்தது.
இதன் காரணமாக இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ் , இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் பெரிய அளவில் சரிவை கண்டன. இந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் பெருமளவில் ஐடி நிறுவன பங்குகளை விற்பனை செய்து வெளியில் வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவன பங்குகளை பெரிய அளவில் விற்பனை செய்து பணமாக்கியுள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிக அளவு முதலீட்டாளர்கள் வெளியேறிய ஐடி நிறுவனமாக இன்போசிஸ் இருக்கிறது. இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து சுமார் 8,624 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றன என்கிறது எக்கனாமிக் டைம்ஸ் செய்தி.
குறிப்பாக ஐசிஐசிஐ ப்ரூடென்சியல், ஆதித்யா பிர்லா மற்றும் டிஎஸ்பி ஆகிய மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் அதிக அளவில் இன்போசிஸ் நிறுவன பங்குகளை விற்பனை செய்திருக்கின்றன. 2025 ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவன பங்கு மதிப்பு 14 சதவீதம் சரிவடைந்தது. 2026 தொடங்கியதிலிருந்து 4 சதவீதம் மீண்டு வந்திருக்கிறது. இருந்தாலும் இன்னும் பெரிய அளவில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் மீண்டு வரவில்லை.
அண்மையில் தான் இன்போசிஸ் நிறுவனம் டிசம்பர் மாத காலாண்டுக்கான நிதி முடிவுகளை வெளியிட்டது. கடந்த காலாண்டை விட 0.6 சதவீதம் என நிறுவனத்தின் வருமானம் உயர்ந்து 5.1 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது தரகு நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட சற்றே கூடுதலான வருமானம் தான். இதற்கிடையே மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் இன்போசிஸ் பங்கினை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்து 2200 ரூபாய் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஜெஃப்ரீஸ் , நோமுரா தரகு நிறுவனங்களும் இன்போசிஸ் நிறுவனத்தின் 1800 ரூபாயை எட்டும் என தெரிவித்துள்ளன. ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் இன்போசிஸ் பங்கினை வாங்கலாம் என்றும் 1820 ரூபாய் என பங்கு விலை எட்டுகும் என்றும் கணித்துள்ளது. இன்றைய தினம் தேசிய பங்குச் சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1663 ரூபாயாக இருக்கிறது இந்த நிறுவன பாங்கின் 52 வாரங்கள் அதிகபட்ச விலை 1924 ரூபாய் ஆகும்.
இன்போசிஸ் நிறுவனத்தில் 30.26% பங்குகள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வசம் உள்ளன, மீயூச்சுவல் ஃபண்டுகள் 22% பங்குகளையும், மற்ற உள்நாட்டு நிறுவனங்கள்19% பங்குகளையும் கொண்டுள்ளன.பிரமோட்டர்கள் 14% பங்கினையும் சில்லறை முதலீட்டாளர்கள் 13.95% பங்குகளையும் சொந்தமாக வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications