ஆன்லைன் கேமிங் நிறுவனமான நசாரா டெக்னாலஜிஸ் லிமிடெட், அதன் பங்குப் பிரிப்பு மற்றும் போனஸ் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 12 அன்று ஜூன் காலாண்டு முடிவுகளுடன் இந்த முக்கிய அறிவிப்புகளை இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக நசாரா டெக்னாலஜிஸ் பங்குகள் சந்தையில் கவனத்தை ஈர்த்துள்ளன.
நசாரா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, தற்போதுள்ள ஒரு பங்கு ரூ.4 முக மதிப்புடன் இரண்டாகப் பிரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பங்கும் ரூ.2 முக மதிப்புடன் இரண்டு பங்குகளாக மாறும்.

இது தவிர, 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளையும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பதிவு செய்யப்பட்ட தேதியின்படி, பங்குதாரர்கள் வைத்துள்ள ஒவ்வொரு ரூ.2 முக மதிப்புள்ள ஒரு பங்குக்கும், கூடுதலாக ஒரு ரூ.2 முக மதிப்புள்ள போனஸ் பங்கு வழங்கப்படும்.
இந்த பங்குப் பிரிப்பு மற்றும் போனஸ் வெளியீட்டிற்கான பதிவுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த முடிவுகள் தபால் வாக்கு மூலம் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டவை என்பதால் இறுதி ஒப்புதல் விரைவில் வெளியாக உள்ளது.
பங்குப் பிரிப்பு (Stock Split): பங்குப் பிரிப்பு என்பது ஒரு நிறுவனத்தின் ஏற்கனவே உள்ள பங்குகளை அதிக எண்ணிக்கையிலான பங்குகளாகப் பிரிப்பதாகும். நசரா டெக்னாலஜிஸில், ₹4 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கு, ₹2 முகமதிப்பு கொண்ட இரண்டு பங்குகளாகப் பிரிக்கப்படும். இதன் விளைவாக, உங்களிடம் 10 பங்குகள் இருக்கிறது என்றால் இதன் மூலம் 20 பங்குகளாக அதிகரிக்கும்.
போனஸ் பங்குகள் (Bonus Shares): போனஸ் பங்குகள் என்பது நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் கூடுதல் பங்குகள் ஆகும். நசரா டெக்னாலஜிஸ், ஒரு பங்குக்கு ஒரு போனஸ் பங்கு என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் பங்கு பிரிப்புக்கு பின்பு உங்களிடம் 20 பங்குகள் இருந்தால், கூடுதலாக 20 போனஸ் பங்குகள் உங்களுக்கு கிடைக்கும்.
இதன் வாயிலாக 10 பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு பங்குப் பிரிப்பு மற்றும் போனஸ் பங்குகள் இரண்டையும் சேர்த்த பிறகு மொத்தம் 40 பங்குகள் கிடைக்கும்.
நசாரா டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு இலவச பங்குகளை வெளியிடுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, 2022 இல், நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்கியது. அப்போது, தகுதியுள்ள பங்குதாரர்களுக்கு அவர்கள் வைத்திருந்த ஒவ்வொரு பங்குக்கும் ஒரு இலவச பங்கு கிடைத்தது.
கடந்த ஒரு மாதத்தில் நசாரா டெக்னாலஜிஸ் பங்குகள் வெறும் 2% மட்டுமே லாபம் ஈட்டியுள்ளன. இருப்பினும், இந்த ஆண்டு இதுவரை சுமார் 40% உயர்ந்துள்ளன. தற்போது இந்தப் பங்கின் விலை ரூ.1,436 என்ற 52 வார உச்ச விலைக்கு அருகில் வர்த்தகமாகிறது.
இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, தேசிய பங்குச் சந்தையில் (NSE) நசாரா டெக்னாலஜிஸ் பங்குகள் இன்று 1.18% உயர்ந்து ரூ.1,418.00 இல் நிறைவடைந்தன.


Click it and Unblock the Notifications