நாட்டின் முன்னணி பங்குச் சந்தைகளில் ஒன்று தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ). தற்போது என்எஸ்இ நிறுவனத்தின் பங்குதாரர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனையடுத்து, முதலீட்டாளர்கள் அடிப்படையில், நாட்டின் மிகப்பெரிய பட்டியலிடப்படாத நிறுவனமாக என்எஸ்இ உருவெடுத்துள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பல முன்னணி நிறுவனங்களில் கூட இவ்வளவு முதலீட்டாளர்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் 25
மேலும், லாபத்தின் அடிப்படையில் நாட்டின் நாட்டின் முதல் 25 நிறுவனங்களில் ஒன்றாகவும் என்எஸ்இ உள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.12,188 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 47 சதவீதம் அதிகமாகும்.

என்எஸ்இ நிறுவன பங்குதாரர்களில், எல்ஐசி, ஜிஐசி, நியூஇந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி, நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி மற்றும் ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்டவை முக்கியமானவை. தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 3.23 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தில் சுமார் 34,000 சில்லரை பங்குதாரர்கள் தலா ரூ. 2 லட்சம் வரை மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கிறார்கள்.
ஐபிஓ
என்எஸ்இ நிறுவனம் ஐபிஓவில் களமிறங்க நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி கொஞ்சம் அசைந்து கொடுக்கவில்லை. 8 ஆண்டுகளுக்கு மேலாக என்எஸ்இ நிறுவனத்தின் ஐபிஓ கோரிக்கை முடங்கி கிடக்கிறது. என்எஸ்இ முதல் முதலில் 2016 டிசம்பரில், புதிய பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்வதற்காக, அதற்கான ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்தது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. 2019 நவம்பரில் மீண்டும் செபியிடம் என்எஸ்இ அனுமதி கோரியது. அப்போதும் செபி அனுமதி கொடுக்கவில்லை.
ஆனாலும் மனம் தளராத என்எஸ்இ, 2020ல் இரண்டு முறை ஐபிஓவிற்கான என்ஓசி வேண்டி செபிக்கு கடிதம் எழுதியது. அப்போதும் என்எஸ்இ நிறுவனத்துக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரியில், என்எஸ்இ நிறுவனத்தின் கோரிக்கைக்கு செபி பதில் அளித்தது. அப்போது, தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் தீர்வு நிறுவனம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் தொடர்பான பிரச்சினைகள் எடுத்துரைத்து என்எஸ்இ நிறுவனத்தின் என்ஓசி கோரிக்கைக்கு செபி பதில் அளித்தது.
அனுமதி
இதனையடுத்து, என்எஸ்இ கடந்த மார்ச் மாதத்தில் என்ஓசி வேண்டி விண்ணப்பத்த புதிய மேல்முறையீட்டில், செபியின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து இருந்தது. இதனால் என்எஸ்இ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு செபி விரைவில் அனுமதி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications