அவசரத்திற்கு பணம் தேவைப்பட்டால் வங்கிகளில் லோன் வாங்குவோம் அல்லது நகைகளை அடமானம் வைப்போம். ஆனால் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் ஷேர்களை வைத்து லோன் வாங்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் இனி நீங்கள் யாரிடமும் கடன் கேட்க தேவையில்லை. நீங்கள் ஷேர் வாங்கி வைத்திருந்தால் அவற்றை விற்பதற்கு பதிலாக கடன் பெறலாம். பின்னர் முழு தொகையையும் அடைத்து விட்டு உங்கள் ஷேர்ஸ்-ஐ மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு சில நிதி நிறுவனங்கள் CDSL மற்றும் NSDL டீமேட் அக்கவுண்டுகளில் இருக்கும் பங்குகளை அடமானம் வைத்து கடன் பெற உதவி வருகின்றன.
பங்குகள் மீதான கடன்: எப்படி நகையை பிணையமாக வைத்து கடன் பெறுகிறோமோ? அதே போல பங்குகளை பிணையமாக வைத்து கடன் பெறுவதை தான் "Loan Against Shares - LAS" என்று கூறுகிறோம். இதற்கும் ஒரு சில விதிமுறைகள் இருக்கிறது. கடனை திருப்பி செலுத்தும் வரை நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பங்குகள் பிணையமாக இருக்கும்.

ஆன்லைன் மூலமாக கடன் பெறுவது எப்படி?: மிரே அசெட் ஃபைனான்சியல் சர்வீசஸ் என்ற நிதி நிறுவனம் சமீபத்தில் CDSL டிமேட் அக்கவுண்ட்களில் இருக்கும் பங்குகளை அடமானம் வைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே பங்குகளை வாங்கி வைத்திருக்கும் பயனர்கள் அவர்களின் இணையதளம் அல்லது மொபைல் ஆப் வழியாக கடன் பெற விண்ணப்பிக்கலாம். 2022-ஆம் ஆண்டு இதே நிறுவனம் NSDL டீமேட் அக்கவுண்ட்களில் இருக்கும் பங்குகளையும் அடமானம் வைக்கும் வசதியை அறிமுகம் செய்தது.
பங்குகளின் மதிப்பு சரிந்தால் என்ன நடக்கும்?: பங்குகளை வைத்து கடன் பெறுவது வசதியாக இருந்தாலும் பங்குகளின் மதிப்பு சரிந்தால் என்ன நடக்கும் என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்படலாம். இதற்காகத்தான் நிதி நிறுவனங்கள் உங்கள் பங்குகளின் மதிப்பில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் கடனாக வழங்குவார்கள். இதை லோன் டு வேல்யூ ரேஷியோ என்று அழைக்கின்றனர்.
உதாரணமாக நீங்கள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கிறீர்கள் என்றால்.. அதில் 40 சதவீதம் வரை நீங்கள் கடனாகப் பெற முடியும். அப்படியானால் ரூ.4 லட்சம் வரை கடன் கிடைக்கும். நீங்கள் பங்குகளை அடமானம் வைத்திருக்கும் போது அவற்றை உங்களால் விற்பனை செய்ய முடியாது. சந்தை ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்த லோன் டு வேல்யூ ரேஷியோ 30 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை நிர்ணயிக்கப்படும்.
பங்குகளை வைத்து கடன் பெறுவது முதலீட்டாளர்களுக்கு நல்லதா?: திடீரென பணத் தேவை ஏற்படுகிறது என்றால்.. நீங்கள் வாங்கி வைத்திருக்கும் நல்ல பங்குகளை எல்லாம் விற்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு மாறாக பிணயமாக வைத்து கடன் பெற்றுக்கொண்டு பின்னர் மீண்டும் மீட்டுக் கொள்ளலாம். ஒருவேளை அவசர தேவைக்காக நீங்கள் பங்குகளை விற்பனை செய்தாலும் அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் கடன் வாங்கும் போது இந்த வரி கிடையாது. நீங்கள் எவ்வளவு கடன் வாங்குகிறீர்களோ அதற்கேற்ப வட்டி விதிக்கப்படும்.
பங்குகளை வைத்து எவ்வளவு கடன் பெறலாம்?: கடன் தொகை என்பது சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் லோன் டு வேல்யூ ரேஷியோவைப் பொறுத்தது. மிரே அசெட் ஃபைனான்சியல் சர்வீசஸ் போன்ற நிறுவனங்கள் ரூ.25,000 தொடங்கி ரூ.1 கோடி வரை கடன் வழங்குகிறது. ஆனால் பங்குகளின் முழு சந்தை மதிப்பிற்கும் கடன் பெற முடியாது.
உதாரணமாக லோன் டூ வேல்யூ ரேஷியோ 30 சதவீதமாக இருக்கிறது என்றால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பங்குகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் கிடைக்கும். அதுவே லோன் டூ வேல்யூ ரேஷியோ 45 சதவீதம் வரை இருக்கிறது என்றால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பங்குகளுக்கு ரூ.4.5 லட்சம் வரை கடன் கிடைக்கும். எனவே எவ்வளவு அதிக மதிப்புள்ள பங்குகளாக இருந்தாலும் அவை லோன் டூ வேல்யூ ரேஷியோவைப் பொறுத்தே வழங்கப்படுகிறது.
எவ்வளவு வட்டி விகிதம்?: மிரே அசெட் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆண்டுக்கு 10.25% வட்டி விகிதம் வசூலிக்கிறது. நீங்கள் எவ்வளவு தொகையை செலவு செய்திருக்கிறீர்களோ அதற்கு ஏற்ப வட்டி வசூலிக்கப்படும் என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
