துபாயை சேர்ந்த என்ஆர்ஐ முதலீட்டாளர் ஜஹாங்கீர் பனிக்கவீட்டில் பெரும்பரம்பத்து (ஜேபிபி). இவர் அண்மையில் பங்குச் சந்தையில் தனது கைவசம் உள்ள எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ததன் வாயிலாக ரூ.1.14 கோடி எதிர்பாராத லாபம் ஈட்டினார்.
இது பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தியது. அதில், எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக இருந்தபோதிலும், எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் முக்கிய கூட்டாளிகள் நிறுவனத்தின் பங்கு விலையை செயற்கையாக உயர்த்தியதை செபி கண்டு பிடித்தது.

எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறுவன இயக்குனர் சூட் மெங் சாங் 12.12 சதவீத பங்குகளை அதாவது 10.28 கோடி பங்குகளை ஜேபிபிக்கு (என்ஆர்ஐ முதலீட்டாளர்) வெறும் 1 டாலருக்கு கைமாற்றியுள்ளார். ஜேபிபி கடந்த ஜூலை-செப்டம்பர் மற்றும் நவம்பர்-டிசம்பர் ஆகிய 2 காலகட்டங்களில் கணிசமான பங்குகளை விற்பனை செய்தார்.
அவர் விற்பனை செய்த 2 கால கட்டத்திலும் இந்நிறுவன பங்கின் விலை உச்சத்தில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. 2024 செப்டம்பர் 27ம் தேதியன்று பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை 52 வார உச்சமான ரூ.267.50ஐ எட்டியது. இது ஜேபிபியின் பங்கு விற்பனை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியது.
நிறுவனத்தின் விலை உச்சத்தில் இருக்கும்போது கைவசம் உள்ள பங்குகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே விற்பனை செய்தபோதிலும், கணிசமான அளவு நிதியை துபாய்க்கு மாற்றியதில் ஜேபிபி குறிப்பிடத்தக்க லாபத்தை பெற்றதாக செபி தெரிவித்துள்ளது.
மேலும், எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் பூஜ்யமாக இருந்தபோதிலும், பிப்ரவரி 10ம் தேதி நிலவரப்படி, ஜேபிபி வசம் உள்ள மீதமுள்ள பங்குகளின் மதிப்பு ரூ.698 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் உச்ச விலை அடிப்படையில் ஜேபிபியின் முதலீட்டின் மதிப்பு 32.86 கோடி டாலராகும். இதனால் எஃப்இஎம்ஏ விதிமுறைகளை ஜேபிபி மீறியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிகிறது.
மோசடி நடவடிக்கைகள் மற்றும் பங்கு விலையில் சூழ்ச்சி போன்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் புரோமோட்டர் ப்ரோஃபவுண்ட் பைனான்ஸ் மற்றும் நான்கு பிற நிறுவனங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய செபி தடைவிதித்தது.
செபி தற்போது எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் மீது மோசடி மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை தடை செய்தல் (பிஎஃப்யுடிபி) மற்றும் பட்டியல் கடமை மற்றும் வெளிப்படுத்துதல் தேவைகள் (எல்ஓடிஆர்) விதிமுறைகளின் சாத்தியமான மீறல்கள் குறித்து இப்போது ஆழமான விசாரணையை நடத்தி வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் எல்எஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை முந்தைய வர்ததக தினத்தை காட்டிலும் 5 சதவீதம் குறைந்து ரூ.64.56ஆக இருந்தது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications