ஜி20 கூட்டம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் முடிந்த நிலையில் இந்திய பங்குச்சந்தை வலிமையை உலகே வியந்து பார்க்கும் வகையில் இன்று NSE நிஃப்டி 50 முதல் முறையாக 20,000 புள்ளிகளை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது.
நிஃப்டி குறியீடு நேற்றைய வர்த்தக முடிவில் 180 புள்ளிகள் அதிகரித்து 19,819.95 ஆக இருந்தது. இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 176.40 புள்ளிகள் உயர்ந்து 19.996.35 புள்ளிகளை எட்டியுள்ளது. இதற்கிடையில் வர்த்தகம் முடிவடைய சில நிமிடங்களுக்கு முன்பு சாதனை அளவான 20,008.15 புள்ளிகளை எட்டியுள்ளது.

நிஃப்டி 50 குறியீடு ஜூன் 28, 2023 அன்று முதல் முறையாக 19,000 புள்ளிகளை எட்டியது இதை தொடர்ந்து வெறும் 75 வர்த்தக நாட்களில் 20000 புள்ளிகளை எட்டியுள்ளது.
இது பெரிய விஷயமா என்றால் ரொம்ப பெரிய விஷயம் காரணம் நிஃப்டி 18000 புள்ளிகளை தொட்டு சுமார் 21 மாதங்களுக்குப் பிறகு 19,000 புள்ளிகளை எட்டியது. ஆனால் 19000 டூ 20000 புள்ளிகளை வெறும் 75 நாளில் கடந்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில், குறியீடு 16% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் நிஃப்டி 50 கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 2.5% உயர்ந்தது. அதன் 52 வார குறைந்த அளவான 16,747.70 இலிருந்து, 75 நாட்களில் 19.4% உயர்ந்து 20,000ஐத் தொட்டுள்ளது வியப்பளிக்கும் விஷயமாகவே உள்ளது.
இன்றைய வர்த்தகம் உண்மையிலேயே சர்வதேச சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும், காரணம் ஜி20 கூட்டம் முடிந்த உடன் உலக நாடுகள் வியப்பு அளிக்கும் வகையில் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையை கையாண்டு இந்தியா அசத்தியது. இதேபோல் ஜி20 கூட்டத்தில் இந்தியா மற்றும் உலக நாடுகள் மத்தியிலான வர்த்தகம் மேம்பட முக்கியமான திட்டங்கள் ஒப்புதல் பெற்றது.
இதனால் இன்று காலை முதல் பங்குச்சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் செய்யப்பட்டது, இதோடு இந்திய சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவிய கார்பரேட் நிறுவனங்களின் சிறந்த வருமானம், சர்வதேச முதலீட்டு சந்தையில் சிறந்த எதிர்காலம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரிப்பு, ஐடி மற்றும் வங்கி துறை மீட்டு எழுந்தது என பல விஷயங்கள் சாதகமாக இருந்தது.
இதனால் நிஃப்டி 20000 புள்ளிகளை எட்டியது மட்டும் அல்லாமல் சென்செக்ஸ் 528.17 புள்ளிகள் உயர்ந்து 67,127.08 புள்ளிகளை அடைந்துள்ளது, சென்செக்ஸ் குறியீட்டின் வரலாற்று உச்ச விலை 67619.17 புள்ளிகள். சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பஜாஜ் பைனான்ஸ் மற்றும் எல் அண்ட் டி மட்டுமே சரிவு.


Click it and Unblock the Notifications