ஒலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பங்கு விலை இன்று கடுமையாக சரிந்தது அதன் முதலீட்டாளர்களை கதறவிட்டு உள்ளது. மும்பை பங்குச்சந்தையில் ஓலா பங்குகள் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 8 சதவீதத்திற்கு மேல் சரிந்து பங்கு விலை 32.79 ரூபாயாக குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் பதிவான குறைவான அளவாகும். மேலும் தொடர்ச்சியாக 10-வது நாளாக பங்கு சரிவை சந்தித்துள்ளது.
ஜனவரி மாத துவக்கத்தில் 37 ரூபாயில் இருந்த ஓலா பங்குகள் 5ஆம் தேதி 43 ரூபாய்க்கு மேல் இருந்தது. ஆனால் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய சரிவுக்கு மிக முக்கியமான காரணம் அதன் தலைமை நிதி தலைவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தது தான்.

ஏற்கனவே ஓலா விற்பனை, வாடிக்கையாளர் சேவை, தயாரிப்பு, தரம் எண பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில், நேற்று புது பிரச்சனையாக ஓலா CFO ராஜினாமா செய்துள்ளார்.
ஹரிஷ் அபிச்சந்தானி ஜனவரி 19 அன்று தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், ஓலா நிறுவனர் மற்றும் CEO பவிஷ் அகர்வாலுக்கு அளித்த ராஜினாமா கடிதத்தில் இதை உறுதிப்படுத்தினார். அபிச்சந்தானி 2024-ல் ஒலாவின் IPO-வை வெற்றிகரமாக நடத்திய முக்கிய நபர்களில் ஒருவர். இவரின் ராஜினாமா முதலீட்டாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.
ஹரிஷ் அபிச்சந்தானி ராஜினாமாவை தொடர்ந்து இந்நிறுவனத்தின் நிர்வாக வாரியம் உடனடியாக தீபக் ரஸ்தோதி-யை புதிய CFO-வாக நியமித்தது. ஜனவரி 20 முதல் இவர் பதவியேற்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலான நிதி மற்றும் தலைமை அனுபவம் கொண்ட ராஸ்தோகி புரவங்கரா குழு, தீபக் ஃபெர்டிலைசர்ஸ், டாடா ஆட்டோகாம்ப், கேஸ்ட்ரோல், ரேமண்ட் போன்ற நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
ஒலா எலக்ட்ரிக் பங்கு கடந்த ஆண்டு முழுவதும் மோசமான நிலையில் இருந்தது. 2025-ல் பங்கு விலை சுமார் 57-60% சரிந்தது. இந்த சரிவு விற்பனை தேக்கம் மற்றும் வளர்ச்சி மந்தநிலை காரணமாக முதலீட்டாளர் நம்பிக்கை குறைந்தது மூலம் ஏற்பட்டது. 2025 டிசம்பர் 18-ல் 52 வார குறைந்த விலையான ₹30.79-ஐ தொட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி சந்தையில் ஓலா முன்னணியில் இருந்த நிலையில் தற்போது பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார் போன்ற நிறுவனங்கள் வலுவான சப்ளை செயின், விற்பனை - சர்வீஸ் நெட்வொர்க் கொண்டு போட்டி போடுவதால் ஒலாவின் சந்தை பங்கு குறைந்துள்ளது. ஓலா-வின் சந்தை பங்கு ஒரு காலத்தில் 50% வரையில் இருந்தது தற்போது இது கணிசமாக குறைந்துள்ளது.
ஏற்கனவே ஓலாவில் பணிநீக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது மூத்த அதிகாரிகள் வெளியேறுவது தொடர்கதையாகி வருகிறது.


Click it and Unblock the Notifications