இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய நிறுவனம் தான் பேடிஎம். நாம் இன்று கூட எந்த கடைக்கு சென்றாலும் பேடிஎம் சவுண்ட் பாக்ஸை பார்க்க முடியும். டிஜிட்டல் பேமேண்ட் வளர்ச்சியை சிறு வியாபாரிகளிடம் கொண்டு சேர்த்த பெருமை பேடிஎம் நிறுவனத்திற்கு உண்டு.
கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி எடுத்த ஒரு நடவடிக்கை பேடிஎம் நிறுவனத்தின் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பங்குகளை கடுமையாக வீழ்ச்சி அடைய செய்தது. அதில் இருந்து ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்துள்ளது பேடிஎம் நிறுவனம். செப்டம்பர் 5, 2025 அன்று காலை 11:26 நிலவரப்படி, ஒரு வருடத்தில் முதலீட்டாளர்களின் பணத்தை இருமடங்காக்கி, பேடிஎம் பங்குகள் சந்தையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பேடிஎம், கடந்த ஒரு வருடத்தில் சந்தையை மிஞ்சிய செயல்திறனை காட்டி கவனம் பெற்றுள்ளது. மும்பை பங்குச்சந்தை தரவுகளின்படி, கடந்த ஒரு வருடத்தில் பேடிஎம் பங்குகள் 101% வளர்ச்சி அடைந்து மல்டிபேக்கர் வருவாயைப் பதிவுசெய்து, முதலீட்டாளர்களின் பணத்தை இருமடங்காக்கியுள்ளன. இதே காலகட்டத்தில் BSE சென்செக்ஸ் 1.60% சரிவையும், BSE நிதிச் சேவைகள் 5% வளர்ச்சியையும் கண்டன.
அதாவது கடந்த ஆண்டு பேடிஎம் நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய்க்கு பங்கு வாங்கி இருந்தால் தற்போது அதன் மதிப்பு 2 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும் . நடப்பு ஆண்டு முதல் இன்று வரையிலான (YTD) நிலவரப்படி, பேடிஎம் பங்குகள் 28% ஏற்றம் கண்டுள்ளன. செப்டம்பர் 5 அன்று, பேடிஎம் பங்குகள் 2.50% உயர்ந்து ரூ.1268.70 என வர்த்தகமானது. இது 52 வார உச்சபட்ச விலையான ரூ.1296.60-ஐ விட 3% குறைவாகும்.
மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஷிவாங்கி சார்தா அளித்த பேட்டியில், சந்தைகள் நிலையற்றதாக இருந்தாலும், பேடிஎம் பங்குகள் சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் பேடிஎம் பங்கு வளர்ச்சி பாதையில் செல்வதையே காட்டுவதாக கூறுகிறார்.
மேலும் சந்தை ஆய்வாளர் ஒருவர் ஈடி நவ் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பேடிஎம் பங்குகள் தொழில்நுட்ப ரீதியாக, வலுவாகவும், வளர்ச்சியை நோக்கி செல்ல தயாராகவும் உள்ளது. வலுவான எழுச்சியை நான் எதிர்பார்க்கிறேன். வர்த்தக அடிப்படையில் பேடிஎம் பங்குகளின் விலை ரூ. 1300 வரை உயரும் என கணித்துள்ளார்.
நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 122.5 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை அறிவித்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 840 கோடி நிகர நஷ்டத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.
பேடிஎம் தனது IPO-வை நவம்பர் 2021 இல் தொடங்கி, பங்குகளை ரூ. 2150 விலையில் வெளியிட்டது. நிறுவனத்தின் மதிப்பீடு, ஒழுங்குமுறை சவால்கள், அதிகரித்த போட்டி மற்றும் பிற காரணிகள் மே 9, 2024 அன்று ரூ. 310 என்ற வீழ்ச்சி அடைய வைத்தது. தற்போதைய சந்தை விலையில், பேடிஎம் பங்குகள் IPO விலையில் இருந்து இன்னும் 40% குறைவாகவே வர்த்தகமாகின்றன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications