பெட்ரோ கெமிக்கல் துறையை சேர்ந்த ஸ்மால் கேப் நிறுவனமான டைட் வாட்டர் ஆயில் லிமிடெட் (Tide water oil) ஜூலை 4ஆம் தேதியிட்டு ஈவுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு பங்குக்கு 20 ரூபாய் என்ற அளவில் ஈவுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பானது ஜூலை 1ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையில் 2374.05 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. கடந்த மூன்று மாத காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு 64% லாபத்தையும், கடந்த ஓராண்டு காலத்தில் 134 % லாபத்தையும் பெற்று தந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3,994.71 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் 1000 % (ஒரு பங்குக்கு ரூ.20) ஈவுத்தொகை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் 101வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் போது விவாதிக்கப்படும் அதில் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் ஈவுத்தொகையானது முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனம் 1.12 % பங்குகளை கொண்டுள்ளது, அதாவது நிறுவனத்தில் உள்ள மொத்த பங்குகளில் 1.96 லட்சம் பங்குகள் எல்ஐசி வசம் இருக்கின்றன . அதேபோல இந்த நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு விகிதம் என்பது 1.38 சதவீதத்திலிருந்து 1.51% என உயர்ந்துள்ளது.
டைட் ஆயில் நிறுவனத்தை பொருத்தவரை கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 486.82 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இறுதி காலாண்டுடன் ஒப்பிடுகையில் 3.6 % அதிகமாகும் .
மொத்தமாக 2023 - 24 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 1953.14 கோடி ரூபாய் ஆகும். இது அதற்கு முந்தைய ஆண்டில் 1868.79 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால உச்சபட்ச மதிப்பு 2,423 ரூபாய் , 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 1,000 ரூபாய் ஆகும். 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 62% அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 120 % உயர்ந்துள்ளது.
நிறுவனம் அறிவிக்கக்கூடிய அந்த ரெக்கார்ட் தேதியில் யாரெல்லாம் இதில் பங்கு வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் ஒரு பங்குக்கு 20 ரூபாய் என்ற அளவில் ஈவுத்தொகை கிடைக்கும். 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பெட்ரோ கெமிக்கல் துறை நிறுவனம் லூப்ரிகன்ட் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications