வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான நிதி தொழில்நுட்ப நிறுவனம் போன்பே. இந்நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமாகும். யுபிஐ-ல் 48 சதவீத சந்தை பங்களி்ப்பை கொண்டுள்ளது. போன்பே நிறுவனம் பல ஆண்டுகளாக ஐபிஓ மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் 2022 டிசம்பரில் போன்பே நிறுவனம் தனது தலைமை அலுவலகத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு மாற்றியது. இதன் மூலம் மத்திய அரசுக்கு சுமார் ரூ.8,000 கோடி வரி வருவாய் கிடைத்தது.
போன்பே அண்மையில் ஐபிஓவுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கியது. குறிப்பாக கடந்த பிப்ரவரி 20ம் தேதியன்று போன்பே நிறுவனம் சாத்தியமான ஐபிஓ-க்கான ஆயத்த நடவடிக்கைகளை தொடங்குவதாக அறிவித்தது. மேலும், புதிய பங்கு வௌயீட்டிற்கான ஆலோசகர்களாக கோடக் மகிந்திரா கேபிட்டல், ஜேபி மோர்கன்,சிட்டி மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகிய நிறுவனங்களை போன்பே தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

போன்பே நிறுவனம் 1,500 கோடி டாலர் மதிப்பீட்டில் ஐபிஓவில் களம் இறங்கும் எண்ணத்தில் உள்ளது. கடைசியாக போன்பே நிதி திரட்டிய போது அந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 1,200 கோடி டாலராக இருந்தது.
போன்பே நிறுவனம் தற்போது போன்பே பிரைவேட் லிமிடெட் என்ற பெயரை போன்பே லிமிடெட்டாக மாற்றியுள்ளது. இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிட விரும்பும் நிறுவனங்களுக்கு இது ஒரு அவசியமான சட்டப்பூர்வ நடவடிக்கையாகும். திட்டமிடப்பட்ட புதிய பங்கு வெளியீட்டு முன்னதாக தனியார் நிறுவனத்திலிருந்து பொது நிறுவனமாக மாறியுள்ளது என்று நிறுவனங்கள் பதிவாளரிடம் போன்பே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போன்பே நிறுவனம் நிறுவனங்கள் பதிவாளரிடம் தாக்கல் செய்த அறிக்கையில், ஏப்ரல் 16ம் தேதியன்று நடைபெற்ற நிறுவனத்தின் அசாதாரண பொதுக்கூட்டத்தில் போன்பே பிரைவேட் லிமிடெட் என்ற பெயரை போன்பே லிமிடெட் என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த பெயர் மாற்ற விவகாரத்தை கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் மத்திய பிராசசிங் மையம் புதிய ஒருங்கிணைப்பு சான்றிதழை வழங்குவதன் மூலம் அங்கீகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2023-24ம் நிதியாண்டில் போன்பே நிறுவனத்தின் வருவாய் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 73 சதவீதம் அதிகரித்து ரூ.5,064 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.197 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டில் போன்பே நிறுவனத்துக்கு ரூ.738 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
போன்பே நிறுவனம் தனது பேமெண்ட் வணிகம் அல்லாத ஒவ்வொன்றையும், தனக்கு சொந்தமான துணை நிறுவனங்களாக மாற்றி தெளிவான நிறுவன கட்டமைப்பை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications