பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ் நிறுவனம் விலைமதிப்பற்ற உலோகம் மற்றும் நகை தயாரிப்பு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. 2013ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பிஎன்ஜி என்ற பிராண்ட் பெயரில் தங்கம்,வெள்ளி,பிளாட்டினம் மற்றும் வைர நகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
மேலும், சப்தம், ஸ்வராஜ்யா, ரிங்க் ஆஃப் லவ் போன்ற பல துணை பிராண்டுகளுடன் வைர நகை சேகரிப்புகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. 2024 செப்டம்பரில் பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. அப்போது அதன் வெளியீட்டு விலையான ரூ.480ஐ காட்டிலும் 74 சதவீத (ரூ.830) பிரீமியத்துடன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ் பங்குகள் பட்டியலிடப்பட்ட நாளான 2024 செப்டம்பர் 17ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய உச்சமான ரூ.843.80ஐ எட்டியது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்தது.
2025 ஜனவரி 28ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை இதுவரையிலான குறைந்தபட்சமான ரூ.495.25க்கு சென்றது. இருப்பினும் கடந்த மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை சுமார் 2 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் இதே காலத்தில் நிப்டி50 கு குறியீடு சரிவு கண்டு இருந்தது.
பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ் நிறுவனம் தனது 2024 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை இன்று வெளியிட்டது. இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் கணிப்புகளை காட்டிலும் சிறப்பாக இருந்தது. இந்நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.2,407 கோடியும், நிகர லாபமாக ரூ.85 கோடியும் ஈட்டியுள்ளது. இது முந்தைய செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தன் எதிரொலியாக இந்நிறுவன பங்கின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று பிஎன் காட்கில் ஜூவல்லர்ஸ் பங்கின் விலை 10 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்கியூட் அடித்தது. பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் ரூ.56.45 உயர்ந்து ரூ.621.05ல் முடிவுற்றது.
இன்று வரை இந்நிறுவன பங்கின் விலை அதன் வெளியீட்டு விலையை காட்டிலும் அதிகமாகவே உள்ளது. 2025 மார்ச் காலாண்டுக்குள் இந்நிறுவனம் தனது மொத்த கடைகளின் எண்ணிக்கை 53ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது இந்நிறுவனம் 48 கடைகளை நடத்தி வருகிறது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications