பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 75 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 11 ஆண்டுகள் பதவி வகித்த பெருமைக்கு சொந்தக்காரராக மோடி இருக்கிறார்.பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 11 ஆண்டுகால ஆட்சியில் இந்திய பங்குச் சந்தைகள் எவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்கின்றன எந்தெந்த துறைகள் எல்லாம் மோடியின் ஆட்சியின் கீழ் முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபத்தை தந்துள்ளன என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம் .
கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்திய பிரதமராக முதன்முறையாக பதவியேற்றார். இந்த 11 ஆண்டுகால ஆட்சியில் இந்திய பங்குச் சந்தைகள் பெரிய அளவில் வளர்ச்சி கண்டிருக்கின்றன . மேக் இன் இந்தியா, உற்பத்தி இணைக்கப்பட்ட நிதியுதவி திட்டம் என பல திட்டங்களை நாம் கண்டு இருக்கிறோம்.

2014 ஆம் ஆண்டில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7,360 புள்ளிகளாகத்தான் இருந்தது. தற்போது அது 25 ,000 புள்ளிகளை கடந்து விட்டது. 11 ஆண்டுகளில் நிஃப்டி 240% வளர்ச்சியை பெற்றிருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மோடி பதவியேற்ற 2014 ஆம் ஆண்டில் 24,690 புள்ளிகளாக தான் இருந்தது தற்போது அது 82,000 புள்ளிகளை கடந்துவிட்டது அதாவது சென்செக்ஸ் 235% வளர்ச்சி அடைந்திருக்கிறது .
பிரதமர் மோடியின் இந்த 11 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பங்குச் சந்தையில் அதிகமான வளர்ச்சியை பெற்றது மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் தான் . அதாவது பெரிய கார்ப்பரேட்டுகளுடன் ஒப்பிடும் போது ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் நிறுவனங்கள்தான் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. மும்பை பங்குச்சந்தையின் பிஎஸ்ஈ ஸ்மால் கேப் குறியீடு 491% , மிட்கேப் குறியீடு 435% அதிகரித்து இருக்கிறது.
ரயில்வே ,உள்கட்டமைப்பு, பாதுகாப்பு துறை, உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல துறைகளிலும் அரசு கவனம் செலுத்தி இருப்பதும் இந்திய பங்கு சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் வருகையும் முதலீடும் படிப்படியாக அதிகரித்து இருப்பதும் பங்குச்சந்தை வளர்ச்சிக்கு காரணமாக கூறுகிறார் பொனான்ஸா நிறுவன தலைவர் மிஸ்திரி.
அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்தது, மக்களிடையே நுகர்வு போக்கு அதிகரித்தது, அரசு மூலதன செலவினத்தை உயர்த்தியது , வங்கி துறைகள் டிஜிட்டல் மயமானது, கார்ப்பரேட் நிறுவனங்களின் அபார வளர்ச்சி உள்ளிட்டவையே காரணம் என கூறுகிறார்.
இந்திய பங்குச்சந்தை தற்போது ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்தாலும் கூடிய விரைவில் சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளை எட்டுமா என்ற ஆர்வம் பிறந்திருக்கிறது . இந்நிலையில் மோடியின் இந்த 5 ஆண்டுகால ஆட்சி முடிவதற்குள் சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளை கடந்து விடும் என மிஸ்திரி கணிப்பு வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications