பங்குச் சந்தையில் நல்ல பங்குகளை தேர்வு செய்து நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் நல்ல ஆதாயத்தை பெற முடியும். சில சமயங்களில் விதிவிலக்கான அல்லது நினைத்து பார்த்திராத வருமானத்தையும் சில பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கொடுக்கும். அந்த வகையில் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் வருமானத்தை கொடுத்த பங்குகளில் ஒன்றுதான் பிடிசி இண்டஸ்ட்ரீஸ்.
பிடிசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பொறியியல் துறையில் ஒரு முக்கிய உற்பத்தியாளராக உள்ளது. விண்வெளி, பாதுகாப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம் மற்றும் கடல்சார் போன்ற தொழில்துறைகளுக்கு தேவையான தயாரிப்புகளை வழங்குகிறது.

இந்நிறுவனம் பம்புகள் மற்றும் வால்வுகளுக்கான வார்ப்புகள், பம்ப் கேசிங்ஸ் மற்றும் சேம்பர்ஸ் போன்ற மரைன் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது, சிறப்பான வர்த்தக வளர்ச்சி கொண்டுள்ளது. மேலும், இந்நிறுவன பங்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுப்பதால் முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவன பங்குகள் மீது எப்போதும் ஒரு கண் இருக்கும்.
சிறந்த முதலீட்டாளர் முகுல் அகர்வால் இந்நிறுவனத்தின் 1.07 சதவீத பங்கு மூலதனத்தை அல்லது 1.60 லட்சம் பங்குகளை வைத்துள்ளார். இதன் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் பிடிசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளுக்கு எவ்வளவு கிரேஸ் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பிடிசி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.14.24 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 76 சதவீதம் அதிகமாகும். 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 20.6 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.66.92 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த செலவினம் 20 சதவீதம் அதிகரித்து ரூ.58.03 கோடியாக உயர்ந்துள்ளது.
நீண்ட கால அடிப்படையில், பிடிசி இண்டஸ்ட்ரீஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 179 மடங்கு உயர்ந்துள்ளது. 2016 பிப்ரவரியில் ரூ.65 என்ற அளவில் இருந்த இப்பங்கின் விலை தற்போது ரூ.11,635ஆக உயர்ந்துள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.1.80 கோடியாக உயர்ந்திருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 7,665 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 626 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2 வருடத்தில் இந்நிறுவன பங்கு 333 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவன பங்கின் விலை 44 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், குறுகிய கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்துள்ளது.
கடந்த 6 மாதத்தில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 19 சதவீதம் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை 31 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று பிடிசி இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 10 சதவீதம் சரிந்து ரூ.10,730.25ஆக இருந்தது. கடந்த ஜனவரி 9ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.17,978.00ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications