நம் நாட்டின் மெகா கோடீஸ்வரர்கள் சிலர் பெயரை சொல்லுங்க என்ற உடனே நம்மில் பெரும்பாலானோர் டக்கென அம்பானி, அதானி என்று சொல்லுவர். ஆனால் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அம்பானி, அதானிக்கே கடும் போட்டி அளிக்கும் ராதாகிஷான் தமனியை பற்றி பலருக்கு தெரியாது.
இந்தியாவின் டாப் 5 கோடீஸ்வரர்களில் ஒருவர் ராதாகிஷன் தமனி. நம் நாட்டின் பெரும் நகரங்களில் சக்கை போடும் டி-மார்ட் சங்கிலித்தொடர் சூப்பர்மார்க்கெட் கடை இவருக்கு சொந்தமானதுதான். இவர் வர்த்தக உலகில் சத்தம் இல்லாமல் சாதித்து வருபவர். இவர் சிறந்த பங்குச் சந்தை முதலீட்டாளரும் கூட.

ராதாகிஷான் தமனி மற்றும் நிறுவனங்கள் நாட்டின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகளில் முதலீடு செய்து இருந்தனர். 2024 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, ராதாகிஷான் தமனி மற்றும் அவரது சகோதரர் கோபிகிஷான் தமனி ஆகியோரிடம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 20.8 சதவீத பங்குகள் இருந்தன.
தற்போது ராதாகிஷான் தமனி மற்றும் அவரது நிறுவனங்கள் தங்கள் வசம் இருந்த அனைத்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகளையும் விற்பனை செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகளை ராதாகிஷான் தமனி விற்பனை செய்தது பங்குச் சந்தை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ராதாகிஷான் தமனி திடீரென தன் வசம் இருந்த இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளை விற்பனை செய்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த பங்கு விற்பனையில் கிடைத்த பணத்தை புதிய தொழிலில் முதலீடு செய்ய போகிறாரா அல்லது தற்போது மேற்கொண்டு தொழில்களை விரிவுப்படுத்தும் நோக்கில் முதலீடு செய்ய உள்ளாரா என்பது உள்பட கேள்விகள் எழுந்துள்ளன.
ராதாகிஷான் தமனி பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதேவேளையில், கடந்த சில தினங்களாக பங்குச் சந்தையில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்கின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
28ம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமாக ரூ.308.10ஐ எட்டியது. இருப்பினும் வர்த்தகத்தின் இறுதியில் இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.09 சதவீதம் உயர்ந்து ரூ.293.40ல் முடிவுற்றது.
Story Written by: Subramanian


Click it and Unblock the Notifications