4 வருடத்திற்குப் பின் முதல் இடத்தைப் பிடித்த ரிலையன்ஸ் நிறுவனத்தை ஓரம்கட்டியது டிசிஎஸ்..!
மும்பை: வர்த்தகச் சந்தையில் ஒவ்வொரு நிறுவனங்களுக்கு எந்த அளவிற்குப் போட்டி நிலவுகிறதோ, அதே அளவிற்குப் பங்குச்சந்தையிலும் இருக்கிறது.
இந்திய பங்குச்சந்தையில் கடந்த 4 வருடங்களாகச் சந்தை மதிப்பீட்டின் படி முதல் இடத்தில் டாடா குழுமத்தின் மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கண்சல்டன்சி சர்வீசஸ் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், டிசிஎஸ் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் 4 வருட ஆதிக்கத்தை ரிலையன்ஸ் முறியடித்தது.
ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த வெற்றி நிலைக்கவில்லை..!!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் மதிப்பு 1,410 ரூபாய் அளவிற்கு உயர்ந்து இக்குழுமத்தின் சந்தை மதிப்பு 4.58 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் நேற்றைய வர்த்தகத்தில் நிறுவனங்களின் சந்தை மதிப்பீட்டுப் பட்டியலில் 4 வருடத்திற்குப் பின் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடத்தைப் பிடித்தது.
2017..
2008-13 காலகட்டங்களில் சந்தை மதிப்பீட்டுப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ரிலையன்ஸ், இதன் பின் 2வது இடத்தைப் பிடித்தது.
ஜியோ அறிமுகத்திற்குப் பின் தொடர் வளர்ச்சி பாதையில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2017இல் மட்டும் சுமார் 30 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
வெற்றி கொண்டாட்டம்..
4வருடத்திற்குப் பின் பெற்ற இந்த வெற்றியை முழுமையாகக் கொண்டாடுவதற்கு முன்பாகவே, புதன்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 0.23 சதவீதம் சரிந்தது.
இதனால் மீண்டும் ரிலையன்ஸ் நிறுவனம் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, முதல் இடத்தை டிசிஎஸ் கைப்பெற்றியது.
எஸ்பிஐ, ஓஎன்ஜிசி
அதேபோல் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி எஸ்பிஐ இப்பட்டியலில் முன்னேறியது.
டாப் 10 நிறுவனங்கள்
தற்போதைய நிலையில், மும்பை பங்குச்சந்தையில் சந்தை மதிப்பீட்டின் படி, டாடா கண்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி வங்கி, ஐடிசி, எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஓஎன்ஜிசி, இன்போசிஸ், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறுவனங்கள் டாப் 10 பட்டியலில் இடம்பெறுகிறது.
இதனைத் தொடர்ந்து மாருதி சுசூகி, கோல் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, சன் பார்மா, லார்சன் அன்ட் டியூப்ரோ, பார்தி ஏர்டெல், என்சிபிசி, டாடா மோட்டார்ஸ், விப்ரோ ஆகியவை இப்பட்டியலில் இடம்பெறுகிறது.


Click it and Unblock the Notifications