அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரிகள் காரணமாக சர்வதேச அளவில் வர்த்தக போர் என்ற அச்சம் எழுந்தது. அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் அதள பாதாளத்தில் வீழ்ந்தன.
இந்திய பங்குச் சந்தைகள் ஒரு கொடூரமான விற்பனை நிகழ்வை சந்தித்து வருகிறது. ப்ளூ சிப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் என்று பாராமல் அனைத்து பிரிவு பங்குகளின் விலையும் மளமளவென சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

சந்தை மதிப்பு குறைந்தபட்சம் ரூ.8,700 கோடி அதாவது 1 பில்லியன் டாலர் கொண்ட 528 பங்குகளில் 412 பங்குகளின் விலை , அதன் அதிகபட்ச விலையிலிருந்து குறைந்தபட்சம் 20 சதவீதம் சரிந்துள்ளன. குறிப்பாக 19 நிறுவன பங்குகளின் மதிப்பு 50 முதல் 71 சதவீதம் குறைந்துள்ளது. நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு கூட இந்த வீழ்ச்சியிலிருந்து தப்பவில்லை.
புதன்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.1,193.65க்கு சென்றது. இது அதன் உச்ச விலையை காட்டிலும் சுமார் 25 சதவீதம் குறைவாகும்.
2024 ஜூலை 8ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,608.95ஐ எட்டியது. பங்குச் சந்தைகளில் பாகுபாடு இன்றி அனைத்து பங்குகளும் சரிவு கண்டு வருவதால், முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்போலியோக்களை மறு மதிப்பீடு செய்வதைப் பரிசீலிக்குமாறு நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், ஒவ்வொரு சரிவின்போதும் வாங்கும் உத்தியை மியூச்சுவல் பண்டுகள் கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
பங்குச் சந்தையில் பெரிய அடி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நீண்ட கால இலக்குகளை கொண்ட முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடர வேண்டும். ஏனெனில் இது குறுகிய கால சந்தை ஏற்ற இறக்கம்தான். மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் வீழ்ச்சி கடுமையாக உள்ளது. எனவே முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்ய விரும்ப வேண்டும் என்று சில நிபுணர்கள் தெரிவித்தனர்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications