இந்தியாவில் ரயில்வே துறை சார்ந்த ஒரு நிறுவனம் தன்னுடைய முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகள் மற்றும் 25% ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. ரயில்வே துறையை சார்ந்த பொது துறை நிறுவனமான RITES Ltd வளர்ச்சி பாதையில் இருக்கும் நிறுவனம் ஆகும். இதில் முதலீடு செய்திருப்பவர்கள் கணிசமான லாபத்தை பெற்றுள்ளதோடு போனஸ் பங்குகளையும் பெற இருக்கின்றனர்.
தங்களுடைய முதலீட்டாளர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இருப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸாக கிடைக்கும். இதில் ஒருவர் 100 பங்குகளை வைத்திருந்தால் அவருக்கு 100 பங்குகள் போனஸ்காக கிடைக்கும். எனவே 100 என்பது 200 ஆக அதிகரிக்கப் போகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் RITES Ltd நிறுவனம் ஜூலை 31ஆம் தேதி வாரிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியது. அதில் ஈவுத்தொகை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ஒரு பங்குக்கு 2.50 ரூபாய் ஈவுத்தொகையாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஈவுத்தொகை வழங்குவதற்கான ரெக்கார்டு டேட் ஆகஸ்ட் 8ஆம் தேதி என RITES Ltd நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தை பொறுத்தவரை ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் இதன் ஒரு பங்கு மதிப்பு 720 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 432 ரூபாய் ஆகும், 52 வார காலம் உச்சபட்ச மதிப்பு 825 ரூபாயாகும்.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 17,343 கோடி. இது கடன் இல்லாத நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி கணிசமான அளவு ஈவுத்தொகையை வழங்கக்கூடிய நிறுவனமாகவும் இது இருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 2730 கோடி ரூபாயாகும். இதில் லாபம் 571 கோடி ரூபாய். இந்த நிறுவன பங்குகளில் 72% புரமோட்டர்களிடம் இருக்கிறது. சில்லறை முதலீட்டாளர்கள் 13 % பங்குகளை வைத்திருக்கின்றனர்.
உள்நாட்டு நிறுவனங்கள் 7.47 % பங்குகளையும், வெளிநாட்டு நிறுவனங்கள் 3.5 % பங்குகளையும் வைத்திருக்கின்றன. கடந்த ஒரு வார காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3 % உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் சுமார் 53 % இதன் மதிப்பு உயர்ந்துள்ளது. அதே வேலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 158 % அதிகரித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications