அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி உயர்வு அறிவிப்பை தொடர்ந்து, ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பு சர்வதேச சந்தையை கடும் அதிர்ப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு இந்திய தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும் சந்தையில் இதன் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.
டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து, இன்றைய வர்த்தகம் துவங்கும் போதே பெரும் அதிர்வலைகள் உடன் துவங்கியது. இதன் எதிரொலியார இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா குறைந்தது, நேற்றைய வர்த்தகத்தில் 87.65-இல் முடிந்த ரூபாய், இன்று அமெரிக்க டாலருக்கு எதிராக 87.85-இல் தொடங்கியது.

இந்த சரிவு, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக டிரம்ப் இந்தியாவை குற்றம் சாட்டியதால் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவதற்கான அச்சம் அதிகரித்ததால் ஏற்பட்டது.
இதோடு ஆகஸ்ட் 5 அன்று பங்குச் சந்தைகளில் முக்கிய குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் சரிவுடனேயே தொடங்கியது. இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது சென்செக்ஸ் 193.95 புள்ளிகள் குறைந்து 80,824.77-இல் வர்த்தகமானது. 11 மணிக்குள் அதிகப்படியாக 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,558.94 புள்ளிகளை எட்டியுள்ளது.
மேலும் நிஃப்டி குறியீடு காலை வர்த்தக துவக்கத்தில் 43.40 புள்ளிகள் குறைந்து 24,679.35-இல் வர்த்தகத்தை துவங்கியது. தற்போது 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 24,593.15 புள்ளிகளை எட்டியுள்ளது.
டிரம்பின் புதிய அச்சுறுத்தல், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக உறவை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசு இதுவரையில் அமெரிக்காவுக்கு வரி மூலம் பதிலடி கொடுக்கவில்லை.
இதேவேளையில் டிரம்ப்-ன் தொடர் மிரட்டல் இந்திய வர்த்தக சந்தையை பாதிக்கும் என்ற கணிப்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருக்கும் முதலீடுகளை மெல்ல மெல்ல வெளியேறுவதற்கான அச்சத்தை அதிகரித்து, இதுரூபாயின் மதிப்பை பாதித்துள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதற்கு உறுதியாக இருப்பதால், டிரம்பின் குற்றச்சாட்டுகள் புதிய பொருளாதார அழுத்தத்தை உருவாக்கியுள்ளன. சந்தை நிபுணர்கள் இந்த சூழலில் அடுத்த சில நாட்களுக்கு ரூபாயின் மதிப்பு மற்றும் பங்குச் சந்தை நிலைமை பாதிக்கலாம் என்று எதிர்பார்கின்றனர்.


Click it and Unblock the Notifications