இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் அசைக்க முடியாத பொது துறை வங்கி என்ற பெயரை மீண்டும் தக்க வைத்துள்ளது.
ஜூன் 30 உடன் முடிவடைந்த முதல் காலாண்டில் எஸ்பிஐ அபாரமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, வங்கியின் நிகர லாபம் 10.23 சதவீதம் உயர்ந்து 21,121 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் லாபம் 19,160 கோடியாக இருந்தது. அது தற்போது 21,121 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இது 7.30 சதவீதம் அதிகம்.

வங்கியின் நிகர வட்டி வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 14.88 சதவீதம் அதிகரித்து, 46,992 கோடி ரூபாயை எட்டியுள்ளது. எஸ்பிஐ வங்கியின் உள்நாட்டு நிகர வட்டி வரம்பு 3 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டில் இது 2.93 சதவீதமாக இருந்தது. இந்த வங்கியின் ஒட்டுமொத்த வணிகம் 110 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் மொத்த கடன் வழங்கல் 18.63 சதவீதம் அதிகரித்து 50.47 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதில் கார்ப்பரேட் கடன்கள் 18.05 சதவீதமும், சில்லறை வர்த்தகம், வேளாண் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கான கடன்கள் 18.20 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக வேளாண் கடன் வழங்குவது 25.43 சதவீதம் அதிகரித்துள்ளது.
வங்கியின் மொத்த வைப்புத்தொகை 9.73 சதவீதம் உயர்ந்து 60.06 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதே வேளையில் வங்கியின் வாராக் கடன் விகிதம் கடந்த ஆண்டு 1.83 சதவீதத்திலிருந்து குறைந்து, தற்போது 1.47 சதவீதமாக உள்ளது.
டிஜிட்டல் வங்கிச் சேவைகளில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கும் எஸ்பிஐ, இந்த காலாண்டில் புதிதாக தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்குகளில் 64 சதவீதத்திற்கும் அதிகமானவை யோனோ செயலி வழியாகவே டிஜிட்டல் முறையில் தொடங்கப்பட்டதாக கூறுகிறது. வங்கியின் ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளில் சுமார் 98.8 சதவீதம் டிஜிட்டல் மூலமே நடைபெற்றுள்ளன.
எஸ்பிஐ வங்கியின் இந்த வலுவான நிதி முடிவுகள் காரணமாக, பங்குச் சந்தையில் எஸ்பிஐ பங்குகள் இன்று சுமார் 2 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து ஒரு பங்கின் விலை 1,122 ரூபாயாக வர்த்தகமானது. லாபம் அதிகரிப்பு, வாராக் கடன் குறைவு மற்றும் வலுவான கடன் வளர்ச்சி ஆகியவை முதலீட்டாளர்கள் மத்தியில் வங்கியின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளன.
கடந்த ஓராண்டில் இந்த பங்கின் மதிப்பு 37% உயர்ந்துள்ளது, கடந்த 5 ஆண்டுகளில் 150% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பங்கில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 10% பங்கினை தங்கள் வசம் கொண்டுள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

