செபி அமைப்பு, அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததை அடுத்து பங்குச்சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர், அதானி கிரீன் உள்ளிட்ட குழும நிறுவனங்களின் பங்குகள் 13% வரை உயர்ந்தன.
2023ஆம் ஆண்டு ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் அதானி குழும நிறுவனங்கள் கணக்கு வழக்கில் முறைகேடு செய்வதாக பெரிய குற்றசாட்டை முன் வைத்தது. இதனை விசாரித்த செபி அதானி குழும நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், முறைகேடுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 19 அன்று, அதானி குழுமப் பங்குகள் 13.3% வரை உயர்ந்து வர்த்தகமாயின. அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 13% உயர்ந்து, மும்பை பங்குச் சந்தையில் (BSE) ரூ. 687.35 என்ற உச்சத்தைத் தொட்டது. அதைத் தொடர்ந்து, அதானி பவர் பங்குகள் 9% உயர்ந்து ரூ. 686.95 ஆகவும், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் கிட்டத்தட்ட 5% உயர்ந்து முறையே ரூ. 2,519.55 மற்றும் ரூ. 1,032.30 ஆகவும் வர்த்தகமாகின.அதானி போர்ட்ஸ் பங்குகள் 2.8% அதிகரித்தன. AWL அக்ரி பிசினஸ் பங்குகள் 3% உயர்ந்தன.
ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பங்கு கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டியிருந்தது. இதன் காரணமாக, குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்தன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் செபி தனது விசாரணையில் எந்தவிதமான மோசடியும், நிதி முறைகேடுகளும் அல்லது தவறான பதிவுகளும் கண்டறியப்படவில்லை என்று உறுதிப்படுத்தியது.
சந்தை ஒழுங்குமுறை ஆணையம் தனது இறுதி உத்தரவுகளில், அதானி குழும விளம்பரதாரர்கள் அடிகார்ப் எண்டர்பிரைசஸ், மைல்ஸ்டோன் டிரேட்லிங்க்ஸ் மற்றும் ரெஹ்வார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி குழுமத்திற்குள் பணத்தை நகர்த்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்தது.
முன்னதாக 2024 ஜனவரியில், சந்தை ஒழுங்குமுறை ஆணையம் கௌதம் மற்றும் ராஜேஷ் அதானிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் 2013 முதல் 2021 வரை கேள்விக்குரிய நிதி ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததாகவும், தொடர்புடைய பரிவர்த்தனைகளை மறைக்க முயன்றதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரித்தது.
இந்நிலையில் தனது விசாரணையை முடித்த பிறகு, எந்தவித மோசடியும் அல்லது தகவல்களை மறைப்பதும் இல்லை என்றும், அனைத்து பணமும் முறையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது என்றும் செபி தீர்ப்பளித்தது.
செபியின் இந்த அறிவிப்பை அடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த கௌதம் அதானி, "விரிவான விசாரணைக்குப் பிறகு, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை செபி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை எப்போதும் அதானி குழுமத்தை வரையறுத்துள்ளது. இந்த மோசடியான மற்றும் உள்நோக்கம் கொண்ட அறிக்கையால் பணத்தை இழந்த முதலீட்டாளர்களின் வலியை நாங்கள் ஆழமாக உணர்கிறோம்" என்று கூறியுள்ளார்.
அதானி குழும பங்குகள் உயர்ந்ததால் ஒரே நாளில் இந்த குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பில் கூடுதலாக 46,000 ரூபாய் சேர்ந்து 13.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications