இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு முதலீட்டாளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய முக்கிய குறியீடுகள் தொடர்ச்சியாக ஏற்றத்துடனே இருக்கின்றன. அந்த வகையில் இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்றும் பங்குச்சந்தைகள் உயர்ந்தன.
சென்செக்ஸ் குறியீடு காலை 82,558 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது. அதன் பின்னர் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு 83,943 புள்ளிகள் என 1000 புள்ளிகளுக்கும் மேல் ஏற்றம் கண்டது. நிஃப்டி 25,368 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கி 25,781 புள்ளிகளை தொட்டது. காலை பங்குச்சந்தையில் லேசான சரிவு இருந்த போதிலும் அதில் இருந்து மீண்டு வந்தது.

ஆசிய சந்தைகளின் பலவீனத்திற்கு மத்தியிலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் தொடர்ச்சியாக முதலீடு செய்கின்றனர். இது சந்தைக்கு பெரும் பலமாக அமைந்தது. நவம்பர் மாத தொடக்கம் முதலே வெளிநாட்டு முதலீடுகள் வருவதால் சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்தது, எதிர்கால பணவீக்க கவலைகளைக் குறைந்தது மற்றும் தாமிரம் மற்றும் அலுமினியம் போன்ற மூலப்பொருட்களின் விலை குறைந்ததால், உற்பத்தி துறை நிறுவனங்களின் லாப வரம்பு மேம்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. எனவே போட்டி போட்டு கொண்டு முதலீட்டாளர்கள் சந்தையில் பணத்தை குவிக்கின்றனர்.
குறிப்பாக உள்நாட்டு தேவையை அடிப்படையாகக் கொண்ட துறைகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தினர். வாகன துறை பங்குகளான மாருதி சுசுகி, மஹிந்திரா & மஹிந்திரா, ஈஷர் மோட்டார்ஸ் போன்றவை மற்றும் வங்கி , நிதி சேவை துறை பங்குகள் இந்த மீட்சிக்கு உந்துசக்தியாக இருந்தன. நுகர்வோர் சாதனங்கள் மற்றும் எஃப்எம்சிஜி துறைகளும் ஏற்றம் கண்டன.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித கொள்கைகள் மற்றும் கடுமையான நிலைப்பாடு குறித்த அச்சங்களால் தகவல் தொழில்நுட்ப பங்குகள் சில அழுத்தங்களை சந்தித்தபோதிலும், உள்நாட்டு துறைகளின் வலிமை ஒட்டுமொத்த சந்தையை உயர்த்தியது.
நிஃப்டிக்கு 25,500 ஒரு முக்கியமான நிலை, இதற்கு மேல் தொடர்ந்து நிலைத்து நின்றால் 26,000 வரம்பை தொட வாய்ப்புள்ளது என சந்தை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இந்திய பங்குச்சந்தைக்கு வெளிப்புற அபாயங்கள் குறைந்திருந்தாலும், வட்டி விகித உயர்வு கவலைகள் மற்றும் மூன்றாம் காலாண்டில் லாப வரம்பில் ஏற்படக்கூடிய சுருக்கம் ஆகியவை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் குறுகிய கால ஏற்றத்திற்கு சவாலாக இருக்கலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

