சென்செக்ஸுக்கு கட்டம் சரியில்லை போலிருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. கடந்த 18 ஜனவரி 2020 அன்று காலையில் பங்குச் சந்தை செய்தியிலேயே இரண்டு டோஜி கேண்டில் உருவாகி இருப்பதால் அடி கொஞ்சம் பலமாக விழுவதற்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே ஜனவரி 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களும் மரண அடி வாங்கி இருக்கிறது சென்செக்ஸ். போகிற போக்கைப் பார்த்தால், இந்த அடி இன்னும் சில நாட்களுக்கும் நீடிக்கும் போலத் தான் தெரிகிறது. அதற்குள் ஏதாவது நல்ல செய்தி வந்து சந்தையின் இறக்க டிரெண்ட் மாறினால் தான் உண்டு.
நேற்று மாலை சென்செக்ஸ் 41,323 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,467 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் குறைந்தபட்சமாக 41,059 புள்ளிகளைத் தொட்டது. இன்றைக்கான வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 41,115 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,218 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 12,106 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 09 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,678 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,063 பங்குகள் ஏற்றத்திலும், 1,444 பங்குகள் இறக்கத்திலும், 171 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,674 பங்குகளில் 64 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 78 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
ஜி எண்டர்டெயின் மெண்ட், க்ராசிம், நெஸ்ட்லே, டி சி எஸ், ஹெச் சி எல் டெக்னாலஜி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஓ என் ஜி சி, கோல் இந்தியா, என் டி பி சி, டாடா மோட்டார்ஸ், யூ பி எல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.19 ரூபாயாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 63.95 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications