கொரோனா பீதி இன்னும் உலகத்தை விட்டுப்போகவில்லை. இதுவரை சுமாராக 4.25 லட்சம் பேர் இந்த கொரோனாவால் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் உலக பங்குச் சந்தைகள் அசால்டாக ஏற்றம் காணத் தொடங்கிவிட்டன.
ஏன் இந்த திடீர் ஏற்றம்..? சென்செக்ஸில் நிலவரம் என்ன..? முதலில் சென்செக்ஸ் நிலவரத்தில் இருந்து தொடங்குவோம்.

நெகட்டிவ் காரணங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு, உலக வர்த்தகம் வளராமல் இருபப்து, கம்பெனிகளின் வருமானங்களும் அதிகரிக்க வாய்ப்பில்லாமல் இருப்பது, ஏற்றுமதி இறக்குமதி பெரிய அளவில் தடைபட்டு இருப்பது, சர்வதேச போக்குவரத்துக்கள் தடைபட்டு இருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் 76 ரூபாய்க்கு மேல் இருப்பது என சந்தை இறக்கம் காண பல காரணங்கள் இருக்கின்றன.

பாசிட்டிவ் காரணங்கள்
வரும் ஏப்ரல் 03, 2020 அன்று மத்திய ரிசர்வ் வங்கி, தன் வட்டி விகிதக் கூட்டத்தில் ஒரு கணிசமான வட்டி விகிதக் குறைப்பு நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு இந்திய சந்தையை பெரிய அளவில் முன் எடுத்துச் சென்று இருப்பதாக பலரும் சொல்கிறார்கள்.

பாசிட்டிவ் 2
உலகின் பல நாட்டு சந்தைகளும் ஜாஜ்வல்யமாக ஏற்றம் காண்பது, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது, இந்திய சந்தைகளின் தாதாக்களான ரிலையன்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், ஹெச் டி எஃப் சி, கோட்டக் மஹிந்திரா, ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகளின் விலை ஏற்றம் போன்றைவைகளால் இந்திய சந்தைகள் 1,860 புள்ளிகள் ஏற்றம் கண்டு அதிரடிகாட்டி இருக்கின்றன. இப்போது சந்தை நிலவரத்தைப் பார்ப்போம்.

சென்செக்ஸ்
நேற்று மாலை, 26,674 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 26,499 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. அதிகபட்சமாக 28,790 புள்ளிகளைத் தொட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 28,535 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. ஆக நேற்றைய குளோசிங்கில் இருந்து இன்றைய குளோசிங் புள்ளியான 28,535 புள்ளிகளை கணக்கிட்டால் சுமார் 1,860 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

பங்குகள் நிலை
சென்செக்ஸின் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,356 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,211 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 992 பங்குகள் இறக்கத்திலும், 154 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

இன்ப அதிர்ச்சி கொடுக்கும் உலக சந்தை
இன்று மார்ச் 25, 2020 வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் லண்டனின் எஃப் டி எஸ் இ 1.92 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிரான்சின் சி ஏ சி 1.91 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 1.09 % ஏற்றாத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஆசிய சந்தைகள்
இன்று மார்ச் 25, 2020, ஆசியாவின் அனைத்து சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஜப்பானின் நிக்கி 8.04 % அதிகரித்து இருக்கிறது. குறைந்தபட்ச ஏற்றம் என்றால் சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 2.17 % ஏற்றம் கண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டாலர்
மேலே சொன்னவைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்னும் 76 ரூபாயைத் தாண்டி வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இருப்பினும் இந்திய சந்தைகள் மேலே சொன்ன காரணங்களால் ஏற்றம் கண்டு இருக்கின்றன.

பங்குகள்
ரிலையன்ஸ், க்ராசிம், கோட்டக் மஹிந்திரா, யூ பி எல், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், கோல் இந்தியா, இந்தியன் ஆயில், ஐ டி சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.