கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவது போன்ற சர்வதேச காரணிகள் ஒரு பக்கம் இந்திய சந்தையை கீழே தள்ளின.
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கே ஐந்து சதவிகிதத்துக்குள் வரலாம் என்கிற தரகு நிறுவனங்களின் கணிப்பு மறு பக்கம் என எல்லாம் சேர்ந்து இப்போது சென்செக்ஸை புரட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது.
விளைவு ஒரே நாளில் சென்செக்ஸ் 787 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது. இது சென்செக்ஸ் வரலாற்றிலேயே, 15-வது மிகப் பெரிய சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாள்
கடந்த வெள்ளிக்கிழமை, மாலை சென்செக்ஸ் 41,464 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,378 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,676 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 787 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 12,170 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 11,993 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
பங்குகள் நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 02 பங்குகள் ஏற்றத்திலும், 28 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,729 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 605 பங்குகள் ஏற்றத்திலும், 1,943 பங்குகள் இறக்கத்திலும், 181 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,729 பங்குகளில் 46 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 102 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
லாபம் நட்டம்
டைடன் கம்பெனி, விப்ரோ, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.பஜாஜ் ஃபைனான்ஸ், வேதாந்தா, ஜி எண்டர்டெயின்மெண்ட், எஸ்பிஐ, யெஸ் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. 1,943 பங்குகள் விலை இறக்கம் என்பதால், சந்தையில் பயங்கரமாக வர்த்தகம் நடந்து இருக்கிறது போல.
உலக சந்தைகள்
அமெரிக்க சந்தை கடந்த ஜனவரி 03, 2020 அன்று -0.79 % இறக்கத்தில் நிறைவடைந்து இருக்கிறது.
ஜனவரி 06, 2020 இன்றைய வர்த்தகத்தில், லண்டனின் எஃப் எஸ் இ -1.05%,பிரான்ஸின் சி ஏ சி -1.27%, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் -1.68% சரிந்து இருக்கின்றன. ஐரோப்பிய சந்தைகளைத் தொடர்ந்து ஆசியச் சந்தைகளிலும் ரத்தம் பயங்கரமாகத் தெரித்து இருக்கிறது.
ஆசியச் சந்தைகள்
சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ச் நிஃப்டி -1.63%
ஜப்பானின் நிக்கி -1.91%
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் -0.62%
ஹாங்காங்கின் ஹேங்செங் -0.79%
தைவான் நாட்டின் தைவான் வெயிட்டெட் -1.30%
தென் கொரியாவின் கோஸ்பி -0.98%
தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் -1.66%
இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் -1.04%
சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -0.01%
என எல்லா ஆசிய சந்தைகளும் இறக்கம் கண்டு தான் வர்த்தகமாகி இருக்கின்றன.
இண்டெக்ஸ்
இன்று நிஃப்டியின் அனைத்து துறைகளும் மரண அடி வாங்கி இருக்கின்றன. குறிப்பாக பொதுத் துறை வங்கிகள் துறை -4.34% சரிந்து இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து மெட்டல் துறை -2.90%, வங்கி -2.59% என அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் மரண அடி வாங்கி வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.


Click it and Unblock the Notifications