இன்று காலை 41,048 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ். இது தான் இன்றைய வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் தொட்ட உச்சப் புள்ளி.
நேற்றைக்கு போல கொஞ்சம் இறக்கம் கண்டாலும், சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில், ஏற்றம் காணும் என எதிர்பார்த்த முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எல்லாம் ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.
சென்செக்ஸ் தன் உச்சப் புள்ளியான 41,048 புள்ளிகளில் இருந்து 1,183 புள்ளிகள் சரிந்து 39,865 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இரண்டு பங்குகள் மட்டுமே
சென்செக்ஸ் இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், என் டி பி சி, ஏஷியன் பெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு பங்குகள் தவிர, மற்ற 28 பங்குகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, ஹெச் சி எல் டெக்னாலஜி எல்லாம் நான்கு சதவிகிதத்துக்கு மேல் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
மும்பை பங்குச் சந்தை நிலவரம்
மும்பை பங்குச் சந்தையில் ஒட்டு மொத்தமாக தற்போது 2,708 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 831 பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 1,705 பங்குகள் விலை இறக்கத்திலும், 172 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
செம சரிவில் ஐரோப்பிய சந்தைகள்
இன்று (15 அக்டோபர் 2020, வியாழக்கிழமை), லண்டனின் எஃப் டி எஸ் இ 2.23 % இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.32 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 3.02 % இறக்கத்திலும் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. ஐரோப்பிய சந்தைகளின் சரிவு, இந்திய பங்குச் சந்தைகளில் பலமாக எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.
எல்லா இண்டெக்ஸும் சரிவு
இந்திய பங்குச் சந்தைகளில், மெட்டல் தவிர, மற்ற எல்லா துறை சார்ந்த செக்டார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. தனியார் வங்கி, பொதுத் துறை வங்கி, நிதி சேவைகள், ஐடி, மீடியா போன்ற செக்டார் இண்டெக்ஸ்கள் இரண்டு சதவிகிதத்துக்கு மேல் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications