பங்குச் சந்தைகளின் பொன்னான ஆண்டு.. சென்செக்ஸ், நிஃப்டி 5 சதவீதம் வளர்ச்சி..

2024-25ம் நிதியாண்டு வரும் மார்ச் 31ம் தேதி திங்கட்கிழமையோடு விடைபெற உள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அன்றைய தினம் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 28) இந்த நிதியாண்டின் கடைசி பங்கு வர்த்தக தினமாக அமைந்தது. அன்றைய தினம் பங்குச் சந்தைகள் சிறிய சரிவுடன் நிறைவடைந்தது. நேற்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 191.51 புள்ளிகள் குறைந்து 77,414.92 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 72.60 புள்ளிகள் சரிந்து 23,519.35 புள்ளிகளில் முடிவுற்றது. இருப்பினும் ஒட்டு மொத்த அடிப்படையில் இந்த நிதியாண்டு பங்குச் சந்தைகளுக்கு ஒரு பொன்னான ஆண்டாக அமைந்தது. இந்த நிதியாண்டில் பங்குச் சந்தையின் நிலவரம் குறித்து கொஞ்சம் சுருக்கமாக பார்ப்போம்.

பங்குச் சந்தைகளின் எழுச்சி

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்றபோதிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதையடுத்து தொடர்ந்து முறையாக மத்தியில் ஆட்சியை பாஜக தக்க வைத்துக் கொண்டது. கடந்த ஜூனில் நரேந்திர மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவியேற்றார். மத்தியில் நிலையான ஆட்சி அமைந்ததையடுத்து பங்குச் சந்தையில் நல்ல மீட்சி ஏற்பட்டது. கடந்த ஜூலையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகும் மீண்டும் ஒரு எழுச்சி சந்தையில் ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் இறுதியில் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,978.25 புள்ளிகளை எட்டியது, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 26,277.35 புள்ளிகளை தொட்டது.

பங்குச் சந்தைகளின் பொன்னான ஆண்டு.. சென்செக்ஸ், நிஃப்டி 5 சதவீதம் வளர்ச்சி..

அடி மேல் அடி

ஆனால் அக்டோபர் முதல் பங்குச் சந்தை நிலவரம் தலைக்கீழாக மாறினது. பல்வேறு காரணங்களால் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.4 சதவீதமாக குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த அளவுக்கு குறையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பங்குச் சந்தையின் சரிவுக்கு முதல் காரணமாக இது அமைந்தது. அடுத்ததாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள். சீன பங்குச் சந்தையில் நிறுவன பங்குகளின் விலை கவர்ச்சிகரமானதாக இருந்தது, அமெரிக்காவில் கவர்ச்சிகரமான முதலீட்டுக்கான வாய்ப்புகள் போன்ற காரணங்களால் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் அதிகளவில் பங்குகளை விற்று, அந்த பணத்தை சீனா பங்குகள் மற்றும் அமெரிக்காவில் முதலீடு செய்தனர்.

வில்லன் டிரம்ப்

இந்த பாதிப்புகளிலிருந்து சந்தை சிறிது மீட்சி காண்பதற்குள், பங்குச் சந்தைக்கு வில்லனாக வந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் இந்திய பங்குச் சந்தைகளை கதற வைத்தன. கடந்த அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான 5 மாதங்களும் பங்குச் சந்தைகள் சரிவின் பாதையில் இருந்தது. தேசிய பங்குச் சந்தை தனது வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து 5 மாதங்களாக சரிவு கண்டு மோசமான சாதனையை படைத்தது. பங்குச் சந்தைகள் அதன் உச்சத்திலிருந்து 10 சதவீதம் சரிவு கண்டது. இருப்பினும் ஒட்டு மொத்த அளவில் இந்த நிதியாண்டு பங்குச் சந்தைகள் ஏறுமுகமாகவே அமைந்தது. 2024-25ம் நிதியாண்டில் சென்செக்ஸ் 5.1 சதவீதமும், நிஃப்டி 5.3 சதவீதமும் வளர்ச்சி கண்டன.

அன்னிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள்

இந்த நிதியாண்டில் அன்னிய முதலீட்டாளாகள் இந்திய பங்குச் சந்தையில் நிகர விற்பனையாளர்களாக இருந்தனர். அவர்கள் ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர். அதேசமயம், உள்நாட்டு முதலீட்டாளர்கள் நிகர வாங்குபவர்களாக இருந்தனர். அவர்கள் ரூ.6.06 லட்சம் கோடியை பங்குகளில் முதலீடு செய்தனர். இந்த நிதியாண்டில் 12 மாதங்களில் 7 மாதங்கள் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தனர். அதேசமயம் இந்த நிதியாண்டு முழுவதும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்தனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக கடந்த அக்டோபரில் ரூ.1.07 லட்சம் கோடிக்கு பங்குகளை வாங்கினர். அதேசமயம் குறைந்தபட்சமாக கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.23,486 கோடியை பங்குகளில் முதலீடு செய்து இருந்தனர்.

இன்டெக்ஸ்

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பாதுகாப்பு, நிஃப்டி நிதி சேவைகள், நிஃப்டி பார்மா, நிஃப்டி மெட்டல் மற்றும் நிஃப்டி நுகர்வோர் சாதனம் உள்ளிட்ட துறைகள் நல்ல ஆதாயத்தை கொடுத்தன. அதேசமயம் நிஃப்டி மீடியா, நிஃப்டி எனர்ஜி, நிஃப்டி பிஎஸ்யு வங்கி மற்றும் நிஃப்டி எண்ணெய் மற்றும் கேஸ் உள்ளிட்ட இன்டெக்ஸ்கள் சரிவை சந்தித்தன.

அதிக லாபம் கொடுத்த பங்குகள்

பிஎஸ்இ 500 இன்டெக்ஸில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் 245 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. குறிப்பாக மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ், ஆட்டம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், தீபக் பெர்டிலைசர்ஸ் அண்ட் பெட்ரோ கெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன், ஜிஆர்எஸ்இ, லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி, காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா மற்றும் பிடிசி இண்டஸ்ட்ரீஸ், ஆம்பர் எண்டர் பிரைசஸ் மற்றும் ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் ஆகிய பங்குகள் இந்த 2024-25 நிதியாண்டில் 90 சதவீதத்துக்கு மேல் ஆதாயத்தை கொடுத்தன.

அதிக சரிவை சந்தித்த பங்குகள்

இந்த நிதியாண்டில், டெலிவரி, பிர்லா சாஃப்ட், அதானி கிரீன் எனர்ஜி, மகிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ், நெட்வொர்க் 18 மீடியா அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்,ரிலாக்ஸோ ஃபுட்வேர்ஸ், ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் ரினீவபிள் எனர்ஜி, சொனாட்டா சாஃப்ட்வேர், இண்டஸ்இந்த் வங்கி, சன்பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் கம்பி ஆகிய பங்குகள் 43 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.

தப்பி பிழைத்த முதலீட்டாளர்கள்

இந்த நிதியாண்டு பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரோலர் கோஸ்டர் சவாரியாக இருந்தது. இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்ததால் கடந்த செப்டம்பர் வரை முதலீட்டாளர்கள் உற்சாகமாக இருந்தனர். ஆனால் அக்டோபர் மாதத்திற்கு பங்குச் சந்தைகள் முதலீட்டாளர்களை கண்ணீர் விட வைத்துவிட்டன. கடந்த பிப்ரவரி வரையிலான 5 மாதங்களும் பங்குச் சந்தைகள் முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்தன. இருப்பினும் இந்த மார்ச் மாதத்தில் பங்குச் சந்தைகள் சிறிது மீட்சி கண்டதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

Story written : subramanian

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+