சென்செக்ஸ் இன்று பலத்த அடி வாங்கியது. இன்று வர்த்தக நேர முடிவில் 462 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இன்று காலை 37,387 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ் சுமார் 37,018 என்கிற புள்ளியைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. சரி ஏன் சந்தை திடீரென சரிகிறது..? இந்த கேள்விக்கு நம்மிடம் எட்டு காரணங்கள் இருக்கின்றன.

1. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தற்போது 69.20 ஆக சரிந்தது,
2. அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் மேற்கொண்டு 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டாலும், எதிர்பார்த்த அளவுக்கு வட்டி விகிதங்களைக் குறைக்காதது,
3. பயத்தினால் சந்தை வர்த்தகர்கள் தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறியது,
4. சென்செக்ஸின் முக்கிய பங்குகளான வேதாந்தா, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, டெக் மஹிந்திரா போன்ற அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகள் பெரிய அளவில் விலை சரிந்து வர்த்தகமானது,
5. ஜூன் 2019 காலாண்டு முடிவுகள் வலுவாக இல்லாமல், முதலீட்டாளர்களின் சென்டிமென்டை பாதித்தது,
6. பட்ஜெட்டில் எதிர்பார்த்த விஷயங்கள் சொல்லப் படாதது, இந்திய கம்பெனிகளின் வருமானம் குறைவாக இருப்பது, மேற்கொண்டு இந்திய வங்கிகள் கடன் கொடுக்க பணம் இல்லாமல் தவிப்பது, இந்தியாவில் உள் நாட்டில் நுகர்வுகள் குறைந்து காணப்படுவது,
7. பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதர்கு முன்பே, காலாண்டு முடிவுகள் லாபமா, நட்டமா..? வருவாய் அதிகரித்திருக்கிறதா, இல்லையா..? என எதையும் பார்க்காமல், ஏர்டெல் பங்குகள் விலை சுமார் 3% இறக்கத்தில் வர்த்தகமானது,
8. இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையின் அவுட் புட் வெறும் 0.2 % மட்டுமே ஜூன் 2019-ல் அதிகரித்திருக்கிறது. நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம் போன்ற இந்தியாவின் முக்கிய எட்டு துறைகள் தான் இந்தியாவின் 40% பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கின்றன. அதுவே வெறும் 0.2% தான் வளர்ந்திருக்கிறது.
இப்படி எட்டு காரணங்களும் சேர்ந்து இந்தியாவின் பங்குச் சந்தையான சென்செக்ஸை துவைத்து எடுத்தன. அதனால் தான் சென்செக்ஸ் பயங்கரமாக இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications