பொதுவாகவே, பங்குச் சந்தைகளில் இருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் செண்டிமெண்டைப் பொறுத்து தான் சந்தையின் ஏற்ற இறக்கம் இருக்கும்.
இப்போது கொரோனா பயம் பெரிய அளவில் நம் சந்தைகளை பாதிக்காமல் இருப்பதைப் போலத் தோன்றுகிறது.
கொரோனா செண்டிமெண்ட் போக, உலக பங்குச் சந்தைகளும் ஓரளவுக்கு நல்ல ஏற்றத்திலும், பெரிய இறக்கம் இல்லாமலும் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. எனவே சென்செக்ஸ் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸ் நேற்றைய ஏற்றம்
ராம நவமி, மகாவீரர் ஜெயந்தி போன்ற விடுமுறைகள் எல்லாம் முடிந்து, நேற்று வர்த்தகமான சென்செக்ஸ், பிரமாதமான ஏற்றத்தில் நிறைவடைந்து, முதலீட்டாளர்கள் வயிற்றில் பால் வார்த்தது. நேற்று ஒரே நாளில் கண்ட ஏற்றம் (8.9 %) கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு நாள் ஏற்றம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்படி ஒரு ஏற்றத்தை இன்று சென்செக்ஸ் கொடுக்குமா.? வாருங்கள் பார்ப்போம்.
நிலவரம் என்ன
ஏப்ரல் 07, 2020, செவ்வாய்க் கிழமை, மாலை சென்செக்ஸ், 30,067 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 29,701 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், அதிகபட்சமாக 31,227 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது சென்செக்ஸ். இது 1,160 புள்ளிகள் ஏற்றம். ஆனால் தற்போது சுமார் 750 புள்ளிகள் ஏற்றத்தில் 30,817 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
பி எஸ் இ
நேற்றைக்குப் போலவே, சென்செக்ஸின் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், 04 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,972 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,477 ஏற்றத்திலும், 406 பங்குகள் இறக்கத்திலும், 89 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக சந்தைகள்
ஏப்ரல் 07, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் மீண்டும் 0.33 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. லண்டனின் எஃப் டி எஸ் இ 2.19 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.12 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 2.79 % ஏற்றத்திலும் வர்த்தகமாயின. ஐரோப்பிய நாட்டுச் சந்தைகள் கொரோனா பீதியில் இருந்து வெளி வருவதாக கணக்கில் கொண்டாலும், அமெரிக்க நாட்டுச் சந்தைகள் இன்னும் வெளி வந்ததாகத் தெரியவில்லை.
ஆசிய சந்தைகள்
இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட், தாயாந்தின் எஸ் இ டி காம்போசைட், சிங்கப்பூரின் ஸ்ரெய்ட் டைம்ஸ், ஹாங்காங்கிங் ஹேங்செங் சந்தை போன்றவைகள் எல்லாம் சுமாராக 0.11 - 3.16 % வரை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மற்ற ஆசிய சந்தைகள் ஓரளவுக்கு ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பங்கு விலை நிலவரம்
இண்டஸ் இண்ட் பேங்க், கெயில், ஹெச் டி எஃப் சி, மாருதி சுசூகி, வேதாந்தா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. டிசிஎஸ், ஐடிசி, ஸ்ரீ சிமெண்ட்ஸ், டைடன் கம்பெனி, க்ராசிம் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உஷார்
இன்று கொஞ்சம் ஜர்க் அடிக்கும் அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகள், நிலை இல்லாமல் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் சென்செக்ஸ் போன்றவைகளை எல்லாம் கணக்கில் எடுத்துப் பார்த்தால், இன்று சென்செக்ஸ் ஏற்றத்தில் நிறைவடைவது கொஞ்சம் சந்தேகம் தான். மதியம் ஐரோப்பிய சந்தைகள் வர்த்தகமாகத் தொடங்கினால் நிலவரம் மாறலாம். எனவே முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஜாக்கிரதையாக வியாபாரம் செய்யவும்.


Click it and Unblock the Notifications