இன்று காலை பங்குச் சந்தை செய்தியிலேயே, இந்தியப் பொருளாதாரத்தை, சில தளர்வுகளுடன் அரசு திறப்பதற்கு ஆதரவாகத் தான் சந்தை ஏற்றம் காண்பதாகச் சொல்லி இருந்தோம்.
அதே போல சென்செக்ஸும், இன்று ஏற்றத்திலேயே வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
இன்று சென்செக்ஸ் எத்தனை புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது? சென்செக்ஸின் டெக்னிக்கல் சார்ட் என்ன சொல்கிறது? மற்ற உலக சந்தை நிலவரங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

சென்செக்ஸ்
நேற்று மாலை சென்செக்ஸ், 32,424 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 32,906 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தக நேர முடிவில் 33,303 புள்ளிகளைத் தொட்டு 879 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சென்செக்ஸ், தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைவது இது நான்காவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னிக்கல் சார்ட்
சென்செக்ஸின் 1 நாள் டெக்னிக்கல் சார்ட்டைப் பார்த்தால், ஒரு கப் அண்ட் சாசர் பேட்டன் உருவாகி இருக்கிறது. எனவே, சென்செக்ஸ் மேலும் ஏற்றம் காண அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி சந்தையை ஏற்றக் கூடிய நல்ல செய்திகள் வந்து ஏற்றம் கண்டால், குறைந்த பட்சம் 1,200 புள்ளிகளாவது ஏற்றம் காணும் என உறுதியாகச் சொல்லலாம். எனவே அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளாக வைத்துக் கொள்ளலாம்.

பி எஸ் இ பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 05 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,629 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,884 பங்குகள் ஏற்றத்திலும், 605 பங்குகள் இறக்கத்திலும், 140 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மும்பை பங்குச் சந்தையில், சுமாராக 50 பங்குகள் தன் 52 வார கால உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமாகி இருக்கின்றன.

உலக பங்குச் சந்தைகள்
ஜூன் 01, 2020 இன்று லண்டனின் எஃப் டி எஸ் இ 0.87 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.95 % ஏற்றத்திலும், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஜெர்மனி பங்குச் சந்தை இன்று வர்த்தகமாகவில்லை. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகும் பாசிட்டிவ் செய்தி, இந்திய சந்தைகளையும் ஏற்றத்தில் நிறைவடைய வைத்திருக்கிறது.

ஸ்டார் துறைகள்
நிஃப்டியின் எல்லா துறை சார்ந்த இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. ஆனால் ஒட்டு மொத்த சந்தையின் ஏற்றத்தையும் நிர்ணயித்தது பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கி பங்குகள் தான். பொதுத் துறை வங்கி இண்டெக்ஸ், இன்று ஒரே நாளில் 7.57 % ஏற்றம் கண்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பங்கு விலை நிலவரம்
பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டைடன் கம்பெனி, டாடா ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ரெட்டீஸ் லெபாரட்டரி, பார்தி இன்ஃப்ராடெல், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்ட்லே, சன் பார்மா போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.