மும்பை: ஒரு லட்சம் என்ற மைல்கல்லை எது முதலில் எட்டும் வெள்ளியா? சென்செக்ஸா அல்லது பிட்காயினா?- இந்தியாவைப் பொறுத்தவரை முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது எழுந்திருக்கக் கூடிய ஒரு விவாதம் இது. இந்த போட்டியில் எது முதலில் 1 லட்சத்தை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்கலாம்.
தற்போதைய சூழலில் மல்டி கமாடிட்டி வர்த்தகமான எம்சிஎக்ஸ்-இல் வெள்ளியின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக ஒரு கிலோ 96,493 ரூபாய் என்ற உச்சத்தை கடந்த மாதம் எட்டியது. தற்போதைய சூழலில் இது 88,455 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

ஆண்டுதோறும் வெள்ளியின் மதிப்பு 19% என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருவதால், கூடிய விரைவில் வெள்ளியின் விலை தான் ஒரு லட்சம் என்ற அளவை எட்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வியாழக்கிழமை இதுவரை இல்லாத அளவாக 77,145.46 புள்ளிகளை எட்டியது. அதே வேளையில் பிட்காயின் மதிப்பு கிட்டத்தட்ட 66,794 டாலர்கள் என்ற நிலையில் இருக்கிறது. தற்போது ஒரு லட்சம் என்ற அளவை வெட்டுவதற்கு இந்த மூன்றுக்கும் இடையில் தான் கடுமையான போட்டி நிலவுகிறது.
இதனிடையே கமாடிட்டி துறையை சார்ந்த நிபுணர்கள் வெள்ளியின் விலை தான் கூடிய விரைவில் ஒரு லட்சம் என்ற மதிப்பை எட்டும் என கணிக்கின்றனர்.
ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் கமாடிட்டி பிரிவு தலைவரான அனுஷ்கா, ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,10,000 ரூபாய் என்ற இலக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டு விடும் எனக் கூறியுள்ளார். ஆனந்த் ரதி நிறுவனத்தின் பங்கு ஆய்வாளர்களும் கூட இதே கருத்தை தான் முன்வைக்கின்றனர்.
இதே ஆனந்த்ரதி நிறுவனம் சென்செக்ஸ் புள்ளிகள் 2028 ஆம் ஆண்டு 1 லட்சம் என்று மைகல்லை எட்டும் என குறிப்பிட்டுள்ளது. மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் 2029 ஆம் ஆண்டு சென்செக்ஸ் 1.5 லட்சம் என்ற அளவை எட்டும் என கூறியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சென்செக்ஸ் 15% என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிட்காயினை பொறுத்தவரை 2023ஆம் ஆண்டுக்கு பிறகு அதன் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இது 1 லட்சம் டாலர் என்ற மதிப்பை எட்ட கூடும் என பையுகான் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதனை நிச்சயமாக கூற முடியாது என்ற கருத்தையும் முன் வைக்கின்றனர்.
எனவே வெள்ளி தான் இந்த போட்டியில் முந்துகிறது. பல்வேறு உற்பத்தி துறைகளிலும் வெள்ளி பயன்பாடு அதிகரித்துள்ளது, அதுமட்டுமின்றி சர்வதேச அளவில் இருக்கக்கூடிய ஒரு அரசியல் நிலையற்ற தன்மை, தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பது உள்ளிடவை காரணமாக அனைவரும் பாதுகாப்பான முதலீட்டாக வெள்ளியை தான் கருதுகின்றனர். எனவே வெள்ளிக்கான டிமாண்ட் என்பது அதிகரித்து வருகிறது.
இது கமாடிட்டி சந்தையில் ஒரு கிலோ வெள்ளியின் விலையை ஒரு லட்சம் ரூபாய் என்ற மதிப்பில் கொண்டு வந்து விடும் என கோடக் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் மூத்த மேலாளர் செயின்வாலா தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications