சமீப காலமாகப் பல ஆயிரம் சதவீதம் வளர்ச்சி என்பது எல்லாம் கிரிப்டோகரன்சியைத் தொடர்புடைய முதலீடாகவே உள்ளது. ஆனால் மும்பை பங்குச்சந்தை முதலீட்டிலும் பல நிறுவனங்கள் பல ஆயிரம் சதவீத லாபத்தைக் கொடுத்த நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கிறது.
இத்தகைய நிறுவனத்தைத் தேடி கண்டுபிடிப்பதிலும், அதன் நீண்ட கால வளர்ச்சியைக் கணிப்பதிலும் தான் முதலீட்டாளர்களுடைய திறமை உள்ளது. அப்படி ஒரு நிறுவனம் தான் மும்பை பங்குச்சந்தையில் வெறும் கருங்கலாக இருந்த ஒரு நிறுவனம் இன்று வைரம் போல லாபத்தைக் கொடுத்துள்ளது.
சிம்பிளக்ஸ் பேப்பர்ஸ்
சிம்பிளக்ஸ் பேப்பர்ஸ் இந்த நிறுவனத்தின் பெயர் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் எனத் தெரியாது, ஆனால் திங்கட்கிழமை முதல் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆம் வெறும் ஒரு வருடத்தில் 6,406 சதவீதம் வளர்ச்சி என்றால் சும்மாவா..?
6,406 சதவீதம் வளர்ச்சி
சிம்பிளக்ஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை டிசம்பர் 3, 2020ல் வெறும் 0.80 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 52 வார உயர்வான 52.05 ரூபாய் அளவிற்கு உயர்ந்து கடந்த ஒரு வருடத்தில் 6,406 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால் இதுபோல் பென்னி ஸ்டாக்ஸ்-ல் முதலீடு செய்வதில் அதிக ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து முதலீடு செய்யுங்கள்.
1 லட்சம் டூ 65.06 லட்சம்
2020ல் இதே டிசம்பர் 3ஆம் தேதி சிம்பிளக்ஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் நீங்கள் முதலீடு செய்திருந்தால் இந்த வருட காலத்தில் உங்கள் முதலீட்டு மதிப்பு 65.06 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் குறியீடு வெறும் 29.82 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
52 வார உயர்வு
இந்தச் சிம்பிளக்ஸ் பேப்பர்ஸ் பங்குகள் கடந்த 21 நாளில் மட்டும் சுமார் 169.69 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் 4.94 சதவீதம் வளர்ச்சி அடைந்து 52.05 ரூபாய் என்ற 52 வார உயர்வை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் சிம்பிளக்ஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பே 15.62 கோடி ரூபாய் மட்டுமே.
எல்ஐசி நிறுவனம்
இந்த நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனம் சுமார் 12.91 சதவீத பங்குகளைக் கொண்டு உள்ளது. இதேபோல் ஓரியென்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் 1.70 சதவீத பங்குகளைக் கொண்டு உள்ளது, சுமார் 9 நிதி நிறுவனங்கள் 0.16 சதவீத பங்குகளைக் கொண்டு உள்ளது.
வர்த்தகம் ஜீரோ
இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்வதற்கு ஏற்ப லாபத்தைப் பதிவு செய்யவில்லை, 2017 மார்ச் முதல் நஷ்டத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது. மார்ச் 2021ல் சுமார் 10 லட்சத்தை லாபமாகப் பதிவு செய்துள்ளது. இதனால் நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது அதன் வர்த்தகம் லாப அளவீடுகள் ஆகியவற்றை முழுமையாக அறிந்துகொண்டு முதலீடு செய்வது உத்தமம்.


Click it and Unblock the Notifications