இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் இருந்தாலும் சில பங்குகள் மட்டும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தந்துள்ளன. அப்படி ஒரே ஆண்டில் 100% லாபம் தந்த ஒரு மல்டிபேக்கர் பங்கு குறித்து இப்போது பார்க்கலாம்.
எஸ்எம்எல் மஹிந்திரா (SML Mahindra ) இதற்கு முன்பு SML Isuzu என்ற அறியப்பட்ட இந்த நிறுவனத்தின் பங்கின் விலை இன்று 6,249 ரூபாய் என வர்த்தகமாகிறது. இதுவே ஓராண்டுக்கு முன்பு 3,081 ரூபாயாக மட்டுமே இருந்தது. அந்த வகையில் ஒரே ஆண்டில் இந்த பங்கின் விலை 100% உயர்ந்துள்ளது. 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது தற்போது 2 லட்சம் ரூபாயாக மாறி இருக்கும்.

அதுமட்டுமில்லமல் கடந்த 3 மாதங்களில் சுமார் 61 சதவீதமும், கடந்த 1 மாதத்தில் சுமார் 18 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த பங்கின் 52 வார உச்ச விலை 6,898.50 ரூபாயாகவும், 52 வார குறைந்த விலை 2,719 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
1983ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்கள் உற்பத்தியில் இந்நிறுவனம் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக டெம்போ, லாரி, பேருந்துகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை உற்பத்தி செய்கிறது. 2025ஆம் ஆண்டில் மஹிந்திரா நிறுவனம் இந்நிறுவனத்தில் கணிசமான பங்குகளை கைப்பற்றியது.
வணிக வாகனங்கள் பிரிவில் தனது சந்தைப் பங்கை வரும் 2031-க்குள் 10 முதல் 12 சதவீதமாக உயர்த்த இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் மற்றும் காலாண்டு நிதி முடிவுகள் ஓரளவு வலுவாக இருந்தாலும், தற்போதைய சந்தை இறங்குமுகம் மற்றும் அதிகப்படியான மதிப்பீடு காரணமாக பங்குகளில் சிறிது லாபப் பதிவு நடப்பதாக சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இருந்தாலும் ஆட்டோமொபைல் துறையின் நீண்டகால கட்டமைப்பு மற்றும் வணிக வாகன துறைக்கான தேவை அதிகரித்து வருவதால், பங்கு விலை குறையும் போது இதில் முதலீடு செய்யலாம் என பரிந்துரை செய்கின்றனர்.
ஒரே ஆண்டில் 100% வளர்ச்சியைத் தொட்டு சாதனை படைத்த எஸ்எம்எல் மஹிந்திரா பங்கு, தற்போதைய சந்தை நிலவரத்தால் 4% சரிவைச் சந்தித்துள்ளது. வணிக வாகன துறையில் நிறுவனத்தின் இலக்குகள் மற்றும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவை பாசிடிவாகவே இருப்பதால் முதலீடு செய்ய பரிசீலனை செய்யலாம் என்கின்றனர். இது ஒரு பங்கு விலையே 6000 ரூபாக்கு மேல் உள்ளதால் முதலில் சந்தையில் நுழைபவர்களுக்கு இது பொருந்தாது என்கின்றனர்.
9,523 கோடி ரூபாய் சந்தை மூலதன மதிப்பு கொண்டுள்ள இந்நிறுவனம், கடந்த ஜூன் காலாண்டில் 959 கோடி ரூபாய் என 6.5% கூடுதல் வருவாயையும் 64 கோடி ரூபாய் என 17% லாபத்தையும் காட்டியுள்ளது. இந்நிறுவனத்தில் 58% பங்குகள் பிரமோட்டர் வசமும், 37.36% பங்குகள் சில்லறை முதலீட்டாளர் வசமும் உள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


