பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் ரிஸ்க் இருக்கு, ஆனால் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு லாபம் சம்பாதிக்கலாம் என பலரும் சொல்ல கேட்டு இருப்போம். அது உண்மைதான் என்பதை பல நிறுவன பங்குகள் நிரூபித்து வருகின்றன. அந்த வகையில், ஸ்ரீ அதிகாரி பிரதர்ஸ் டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவன பங்கு குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத மல்டிபேக்கர் வருமானத்தை அளித்து பங்குச் சந்தை வட்டாரங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்ரீ அதிகாரி பிரதர்ஸ் டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் 30 ஆண்டுகளுக்கு மேலாக மீடியா துறையில் இருந்து வருகிறது. இந்நிறுவனம் பன்மொழி, பல வகை உள்ளடக்கங்களை தயாரித்து வருகிறது. மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளில் வலுவான இருப்பை கொண்டுள்ளது.

2024ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.3.75 என்ற அளவில் இருந்தது. ஆனால் இந்த பிப்ரவரியில் இப்பங்கின் விலை ரூ.390 என்ற அளவில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவன பங்குகளில் ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது ஒரே வருடத்தில் ரூ.1.04 கோடியாக உயர்ந்திருக்கும்.
2024 டிசம்பர் 12ம் தேதியன்று, மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஸ்ரீ அதிகாரி பிரதர்ஸ் டெலிவிஷன் நெட்வொர்க் பங்கு விலை புதிய 52 வார உச்சமான ரூ.2,197.70ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. இந்த மல்டிபேக்கர் பென்னி ஸ்டாக் தொடர்ந்து சரிவின் பிடியில்தான் உள்ளது.
கடந்த 6 மாத காலத்தில் இப்பங்கின் விலை சுமார் 6 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இருப்பினும் கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 800 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 28,450 சதவீதம் உயர்ந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் ஸ்ரீ அதிகாரி பிரதர்ஸ் டெலிவிஷன் நெட்வொர்க் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.99 சதவீதம் உயர்ந்து ரூ.385.85ஆக இருந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.367.50ஆக இருந்தது.
2024 செப்டம்பர் காலாண்டில் ஸ்ரீ அதிகாரி பிரதர்ஸ் டெலிவிஷன் நெட்வொர்க் நிறுவனத்துக்கு ரூ.8.97 லட்சம் இழப்பு ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். 2023 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.5.40 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications