ஸ்டாலியன் இந்தியா ஃப்ளோரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் குளிர்பதன பொருட்கள் மற்றும் தொழில்துறை வாயுக்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஏர் கண்டிஷனிங், தீயணைப்பு,செமிகண்டக்டர் தயாரிப்பு, வாகன தயாரிப்பு, மருந்து மற்றும் மருத்துவ, பாட்டில் தயாரிப்பு ஏரோசோல்கள் மற்றும் ஸ்பரே ஃபோம் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு தனது சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தனது வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களமிறங்கி திரட்ட முடிவு செய்தது.
இம்மாதம் 16ம் தேதியன்று இந்நிறுவனத்தின் ஐபிஓ தொடங்கியது. ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கின் விலை ரூ.85 முதல் 90 வரை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் ஐபிஓ கடந்த 20ம் தேதியன்று முடிந்தது. முதலீட்டாளர்கள் பங்குகள் வேண்டி 188.38 மடங்கு விண்ணப்பித்து இருந்தார்கள். இதனால் இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு மகத்தான வெற்றி பெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஐபிஓவிற்கான ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இந்நிறுவனங்களின் பங்குகள் பட்டியலிடப்பட்டன.

பங்குச் சந்தைகளில் இன்று ஸ்டாலியன் இந்தியா ஃப்ளோரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவன பங்குகள் வலுவான தொடக்கத்தை கொண்டது. பங்குச் சந்தைகளில் இன்று அந்நிறுவன பங்கு விலை ரூ.120ல் தொடங்கியது. அதன் ஐபிஓ விலையான ரூ.90ஐ காட்டிலும் 33 சதவீதத்துக்கும் கூடுதலான பிரிமீயத்தில் பங்கு பட்டியலிடப்பட்டது. இந்நிறுவனத்தில் ஐபிஒவில் பங்குகளை பெற்றவர்கள் முதல் நாளிலேயே 33 சதவீதம் ஆதாயம் பார்த்துள்ளனர்.
ஸ்டாலியன் இந்தியா ஃப்ளோரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், 2025 ஜனவரி 23ம் தேதி முதல் ஸ்டாலியன் இந்தியா ஃப்ளோரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் ஈக்விட்டி பங்குகள் டி குரூப் செக்யூரிட்டீஸ் பட்டியலில் பட்டியலிடப்பட்டு எக்ஸ்சேஞ்ச் பரிவர்த்தனைகளுக்கு அனுமதிக்கப்படுகின்றன என்பதை எக்ஸ்சேஞ்சின் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கடந்த 22ம் தேதியிட்ட அறிவிப்பு எண் 20250122ஐ பார்க்கவும் என்று தெரிவித்துள்ளது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications