சென்னை: பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்தியாவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை கொட்டும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் 85 லட்சம் பேர் பங்குசந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை ஏன் அதிகரிக்கிறது? இதில் இளைஞர்களின் பங்கு என்ன? என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

மும்பை பங்குச்சந்தை (BSE) உடன் இணைந்துள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நிலவரப்படி, 17.75 கோடியைக் கடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 32.80 சதவித அதிகரிப்பு என்று கூறப்படுகிறது.
ஆசியாவின் முதல் பங்குச்சந்தை மற்றும் உலகின் வேகமான பங்குச்சந்தையான மும்பை பங்குச்சந்தையில், ஒரு மைக்ரோ விநாடியில் 6 முறை பரிவர்த்தனைகள் நடக்கிறது. இதில் பதிவு செய்துள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, தாய்லாந்தின் மக்கள் தொகையை ஒத்திருக்கிறது, என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிக முதலீட்டாளர்கள் உள்ளனர். BSE இல் பதிவுசெய்யப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் 3.31 கோடி நபர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் என்று கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து குஜராத் (1.65 கோடி), உத்தரப் பிரதேசம் (1.92 கோடி), ராஜஸ்தான் ( 1.6 கோடி), மேற்கு வங்காளம் (99 லட்சம்), கர்நாடகா (95 லட்சம்), மத்திய பிரதேசம் (92 லட்சம்), தமிழ்நாடு (85 லட்சம்) நபர்கள் BSE-இல் பதிவுசெய்யப்பட்ட முதலீட்டாளர்கள்.
மேலும் தெலுங்கானா (52 லட்சம்), ஆந்திர பிரதேஷ் (67 லட்சம்), பீகார் (70 லட்சம்), டெல்லி (80 லட்சம்) முதலீட்டாளர்களைக் கொண்டுள்ளது). இதில் லடாக்கில் மட்டும் குறைவான 1800 நபர்கள் மட்டுமே முதலீடு செய்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவிலான நபர்கள் முதலீடு செய்து வருகின்றனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் சுமார் 5.38% அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கான காரணம், இணையதள வர்த்தக பயன்பாடுகளின் எழுச்சியும், ஸ்மார்ட் ஃபோன்களையும் வளர்ச்சியும் தான் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இளம் தலைமுறை சேமிப்பதற்கு பதிலாக முதலீடு செய்ய ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பலர் பங்குச் சந்தையில் ஆர்வம் மிகுந்தவர்களாக இருக்கின்றனர் என்று கண்டறியப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய பங்குச் சந்தைகள் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தி வருகின்றன. இதுவும் முதலீட்டாளர்களை கவர்ந்ததற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications