1985ல் தொடங்கப்பட்ட அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனம் ஏவுகணை மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் முக்கியமான மின்னணு மற்றும் மின் இயந்திர சிஸ்டம்ஸ் மற்றும் பாகங்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் வலுவான ஆர்டர் புத்தகத்தை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்த நம்பிக்கையும் சிறப்பாக உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் நிதி செயல்திறனும் நன்றாக உள்ளது. குறுகிய காலத்தில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயத்தை கொடுத்துள்ளது.
ஒரு மாதத்தில் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவன பங்கின் விலை 53 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் பார்வை இப்பங்கின் மீது விழுந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே 4.04 சதவீதம் உயர்ந்து புதிய 52 வார உச்ச விலையான ரூ.157ஐ எட்டியது. இருப்பினும் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் செயல்பட்டதால் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.37 சதவீதம் குறைந்து ரூ.144.25ல் முடிவுற்றது.

ஒரு மாதத்தில் பங்கின் விலை 53 சதவீதம் உயர்ந்ததால் இப்பங்கினை வாங்கலாமா, விற்கலாமா அல்லது தொடர்ந்து வைத்திருக்கலாமா என்று முதலீட்டாளர்களை யோசிக்க வைத்தது. இந்நிலையில் பங்கின் விலை குறையும் போது வாங்குவது நல்லது என்றும், நடுத்தர கால அளவில் இப்பங்கின் விலை ரூ.175-186 வரை உயர வாயப்புள்ளது என்று நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
அதேசமயம், செபியில் பதிவு செய்யப்பட்டசுயாதீன ஆய்வாளர் ஏ.ஆர்.ராமச் சந்திரன் இந்த பங்கு குறித்து கூறுகையில், இந்த பங்கின் சப்போர்ட் விலையான ரூ.141க்கு கீழ் தினசரி முடிவு இருந்தால் குறுகிய காலத்தில் ரூ.118 இலக்கை அடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். மும்பை பங்குச் சந்தையில் இன்று இந்நிறுவன பங்கின் விலை 3.19 சதவீதம் குறைந்து ரூ.139.65ஆக இருந்தது.
கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 298 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 842 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது. குறுகிய காலத்தில் மல்டிபேக்கர் வருமானத்தை இப்பங்கு கொடுத்துள்ளது. இந்நிறுவனம் 2024 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.8.61 கோடியும், வருவாயாக ரூ.91.20 கோடியும் ஈட்டியுள்ளது. 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.15.87 கோடியாகவும், வருவாய் ரூ.160.71 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications