இந்திய பங்குச்சந்தைகள் இன்று மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடிகளை இழந்துள்ளனர். குறிப்பாக இன்று தேசிய பங்குச்சந்தை ஐபிஓ பட்டியலிடப்பட்ட நிலையில் அது கூட இந்திய பங்குச்சந்தைகளை காப்பாற்ற முடியவில்லை.
காலையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் சரிவுடன் தான் வர்த்தகத்தையே தொடங்கின. கேப் டவுனில் தான் வர்த்தகம் தொடங்கி நடைபெற்றது. நிஃப்டி 220 புள்ளிகள் சரிந்து 23,280 புள்ளிகளில் தான் வர்த்தகத்தையே தொடங்கியது. அதன் பின் படிப்படியாக சரிந்து 23,060 புள்ளிகளுக்கு வந்தது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸும் 500 புள்ளிகள் சரிவில் தான் வர்த்தகத்தை தொடங்கியது.

சென்செக்ஸ் நண்பகலில் கிட்டதட்ட 1100 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து 73,600 புள்ளிகளுக்கு வந்தது. குறிப்பாக ஃபைனான்சியல் சர்வீசஸ், மெட்டல் மற்றும் பிரைவேட் பேங்க் உள்ளிட்ட முக்கியத் துறை குறியீடுகள் தலா 2 சதவீதம் வரை சரிவை சந்தித்து சந்தையை மேலும் கீழிறக்கின. பார்மா மற்றும் ரியால்டி தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே வர்த்தகமாயின.
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் காரணமாக மீண்டும் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் மேல் உயர்ந்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் 102 டாலருக்கும் அதிகமாக வர்த்தகமானது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டன.
அமெரிக்காவில் புதிய வணிக நடவடிக்கைகள் கடந்த ஐந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ளதாக வெளியான புள்ளிவிவரங்கள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தின. இது அடுத்த மாதம் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவின் 10 ஆண்டு கால Treasury yield 5.10 சதவீதத்தை கடந்து, 2007-ஆம் ஆண்டுக்கு பின் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.
இதனால் அமெரிக்காவின் நாஸ்டாக் 1.1 சதவீதமும், எஸ் அண்ட் பி 500 மற்றும் டோவ் ஜோன்ஸ் குறியீடுகளும் சரிவை சந்தித்தன. இதன் தாக்கத்தால் ஆசிய பங்குச்சந்தைகளான ஹாங்காங்கின் ஹேங் செங் மற்றும் ஷாங்காய் காம்போசிட் ஆகியவையும் சரிவுடன் வர்த்தகமாயின. இது தான் இந்திய சந்தையிலும் எதிரொலித்தது.
மேலும் காப்பீட்டு நிறுவனங்களூக்கு காப்பீட்டு விற்பனையில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வர ஐஆர்டிஏஐ திட்டமிட்டுள்ளது. இது காப்பீடு மற்றும் வங்கி பங்குகளை சரிவடைய செய்தது. இன்று தேசிய பங்குச்சந்தை ஐபிஓ வெளியிட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதனால் பங்குச்சந்தைகள் ஏற்றமடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
தேசிய பங்குச்சந்தை பங்கு மதிப்பு 1877 ரூபாய் வரை சென்றது ஆனால் அதன் பின் பங்குச்சந்தை சரிவால் அதன் மதிப்பும் சரிந்து 1830 ரூபாய் என ஆனது. சமீபத்திய நாட்களில் சந்தை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்ததால், முதலீட்டாளர்கள் லாபத்தை ஈட்டும் நோக்கில் பங்குகளை விற்றதும் சரிவுக்கு மற்றொரு காரணமாகும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


