பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் சிலர் தொடர்ந்து டிவிடெண்ட் தரும் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வார்கள். அப்படிப்பட்ட முதலீட்டாளர்கள் விரும்பும் ஒரு நிறுவனம் சிம்பொனி. இந்நிறுவனம் ஒரே நிதியாண்டில் பல முறை டிவிடெண்ட் வழங்கியுள்ளது. சிம்பொனி நிறுவனம் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக ஏர் கூலர்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிறுவன பங்கு மீது முதலீட்டாளர்களுக்கு எப்போதும் ஒரு கண் இருக்கும்.
சிம்பொனி நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.796 கோடி ஈட்டியிருந்தது. மேலும் அந்த நிதியாண்டில் இந்நிறுவனம் லாபமாக ரூ.153 கோடி சம்பாதித்து இருந்தது. ஆனால் 2024 டிசம்பர் காலாண்டில் யாரும் எதிர்பாராத வண்ணம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
{image- tamil.goodreturns.in}
கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.10 கோடி நிகர இழப்பு ஏற்பட்டு இருந்தது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாயும் ரூ.242 கோடியாக குறைந்துள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ஈட்டிய வருவாயை காட்டிலும் 2 சதவீதம் குறைவாகும்.
கடந்த டிசம்பர் காலாண்டில் நஷ்டத்தை சந்தித்தன் எதிரொலியாக நேற்று பங்குச் சந்தையில் சிம்பொனி பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 8.80 சதவீதம் குறைந்து ரூ.1,301.95ஆக சரிந்தது.
அதேசமயம், தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளபோதிலும், சிம்பொனி நிறுவனம் அது குறித்து கவலைப்படாமல் பங்குதாரர்களுக்கு நடப்பு நிதியாண்டுக்கு மூன்றாவது இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது.
ரூ.2 முகமதிப்பு கொண்ட ஈக்விட்டி பங்கு ஒன்றுக்கு ரூ.2 (100 சதவீதம்) 3வது இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது. இடைக்கால டிவிடெண்ட் அறிவித்ததோடு, அதற்கான பதிவு தேதியையும் சிம்பொனி நிறுவனம் அறிவித்துள்ளது. 2025 பிப்ரவரி 11ம் தேதியை இடைக்கால டிவிடெண்டுக்கான பதிவு தேதியாக அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்நிறுவனம் தொடர்ந்து பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கி வருகிறது.
சிம்பொனி நிறுவனம் கடந்த ஆண்டு முழுவதும் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் மற்றும் பங்குகளை திரும்ப பெறுதல்களை தொடர்ந்து வழங்கியது. 2024 நவம்பரில் இந்நிறுவனம் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2 இடைக்கால டிவிடெண்டாக அறிவித்தது.
கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சிம்பொனி பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. அதேநாளில் ஒரு பங்குக்கு ரூ.1 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்தது. 2024 பிப்ரவரி 7ம் தேதியன்று பங்கு ஒன்றுக்கு ரூ.2 மற்றொரு இடைக்கால டிவிடெண்ட் அறிவித்தது. கடந்த நிதியாண்டுக்கு சிம்பொனி நிறுவனம் கடந்த ஜூலை 26ம் தேதியன்று பங்கு ஒன்றுக்கு ரூ.8 இறுதி டிவிடெண்ட் வழங்கியது.
சிம்பொனி 2023 நவம்பர் 3ம் தேதி இடைக்கால டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.2ம், அந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி இடைக்கால டிவிடெண்டாக ரூ.1ம் அறிவித்தது. அந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்டாக ரூ.1ம் அறிவித்தது. அந்த ஆண்டு மார்ச் மாதம் பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டது.


Click it and Unblock the Notifications