இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பங்குச்சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டாடா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமம் டாடா. ஐடி, ஃபேஷன், வாகன உற்பத்தி விற்பனை, ஸ்டீல் என பலதுறைகளிலும் டாடா குழும நிறுவனங்கள் தான் கோலோச்சுகின்றன. ஒட்டுமொத்த டாடா குழும நிறுவனங்களுக்கும் தலைமையாக செயல்படுகிறது டாடா சன்ஸ். இதன் தலைவராக இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவரான் என்.சந்திரசேகரன். இவர் தலைமையில் டாடா குழும நிறுவனங்கள் சிறந்த வளர்ச்சியை அடைந்து வந்தன. இந்த சூழலில் அவர் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

என். சந்திரசேகரனின் ராஜினாமா அறிவிப்பால், முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தி அடைந்து டாடா குழும பங்குகளை பெருமளவில் விற்பனை செய்ய தொடங்கினர். இதனால் டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து ஒட்டுமொத்த பங்குச்சந்தையையே கீழே இழுத்து சென்றது.
டிசிஎஸ் பங்குகள் 4% க்கும் மேல் சரிந்து 2,322 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஓராண்டு காலமாகவே சரிவில் இருந்த டிசிஎஸ் பங்கு தற்போது தான் உயர்ந்து வந்தது.ஆனால் ஒரே நாளில் 4%க்கும் மேல் குறைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் Passenger Vehicles பங்கு மதிப்பு 4% வரை சரிந்து 334 ரூபாயாக குறைந்தது. டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் நிறுவன பங்கு மதிப்பு 2% சரிந்து 1056 ரூபாய்க்கு வர்த்தகமானது. டாடா பவர் பங்கு மதிப்பு 1.5%, டாடா ஸ்டீல் பங்கு மதிப்பு 2%, டிரெண்ட் பங்கு மதிப்பு சுமார் 1% வரை சரிவை சந்தித்தன.
டாடா குழும பங்குகள் சரிந்ததன் விளைவாக பங்குச்சந்தையே கடும் வீழ்ச்சி அடைந்தது. நிப்ஃடி 50 குறியீடு காலை 24,450 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கி பின்னர்24,278 புள்ளிகளாக சரிந்தது.சென்செக்ஸ் 78,263 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கி 77,545 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதனால் சந்தையில் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகளும் சரிந்து செந்நிறமாகவே காட்சி தருகின்றன.
ஆகஸ்ட் 18ஆம் தேதி டாடா குழுமத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்த எதிர்பாராத முடிவை சந்திரசேகரன் அறிவித்துள்ளார். வரும் 2027 பிப்ரவரி மாதம் வரை இவர் இந்த பதவியில் தொடர்வார் என சொல்லப்படுகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66% பங்குகளைக் கொண்டுள்ள டாடா டிரஸ்ட்டின் தலைவர் நோயல் டாடா , சந்திரசேகரன் இந்த பதவியில் தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
டாடா குடும்பத்தை சாராத முதல் நிர்வாகியாக 2017இல் சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்றார். கடந்த 10 ஆண்டுகளில் டாடா குழுமத்தை உலக தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றியதில் சந்திரசேகரனின் பங்கு மிக முக்கியமானது. தமிழ்நாட்டை சேர்ந்தவர் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமத்தை நிர்வகிப்பதில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெருமை கொண்டிருந்தது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

