இந்திய பங்குச்சந்தைக்கு இன்று மோசமான நாள் என்றாலும் டெக் மஹிந்திரா மற்றும் இதர பல ஐடி சேவை நிறுவனங்களுக்கு மிகவும் அற்புதமான நாள். சென்செக்ஸ் குறியீடு 1900 புள்ளிகள் சரிந்து, பின்பு போராடி 1483 புள்ளிகள் சரிவில் முடிந்தது.
இந்த நிலையில் டெக் மஹிந்திரா பங்குகள் 2 சதவீதம் வரையில் உயர்ந்து 1,779.10 ரூபாய் விலையில் முடிந்துள்ளது. இதோடு முதலீட்டாளர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸாக பல நாட்களாக எதிர்பார்த்து இருந்த போனஸ் பங்குகளுக்கான தேதியை அறிவித்துள்ளது.

டெக் மஹிந்திரா தனது செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது, இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு 1:1 போனஸ் பங்குகளை அறிவித்தது. இதன் மூலம் டெக் மஹிந்திரா பங்குகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குதாரருக்கும் ஒரு பங்கு இலவசமாகக் கொடுக்கப்படும். இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டெக் மஹிந்திரா நிர்வாக குழு தனது 1:1 போனஸ் பங்குகளை வழங்குவதற்கான ரெக்கார்டு தேதியை நவம்பர் 30 தேதியை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. இந்த ரெக்கார்டு தேதி மூலம் டெக் போனஸ் பங்குகளைப் பெற தகுதியான பங்குதாரர்களை தீர்மானிக்கப்படுகிறது.
நவம்பர் 30ஆம் தேதி திங்கட்கிழமை என்பதால் டெக் மஹிந்திரா-வின் போனஸ் பங்குகளை பெற விரும்புவோர் நவம்பர் 27ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமைக்குள் பங்குகளை வாங்க வேண்டும்.
இந்த 1:1 போனஸ் பங்குகள் மூலம் 100 பங்குகள் வைத்திருக்கும் ஒரு முதலீட்டாளருக்கு கூடுதலாக 100 பங்குகள் இலவசமாக கிடைக்கும். இந்த பங்கின் முகமதிப்பு 5 ரூபாயாக இருக்கும்.
மேலும் போனஸ் பங்குகள் மூலம் பங்கு இருப்பு இரட்டிப்பானாலும் முதலீட்டின் மொத்த மதிப்பு தானாக இரட்டிப்பாகாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். போனஸ் பங்குகள் மூலம் ஒரு நிறுவனம் அதன் முதலீட்டாளர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முக்கியமான ஆயுதமாகும்.
டெக் மஹிந்திரா பங்குகள் கடந்த 6 மாதங்களில் 25.13 சதவீதம் உயர்ந்துள்ளது. 2026ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 10.71% உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களில் 12.38% லாபத்தை கொடுத்துள்ளது.
டெக் மஹிந்திராவின் சிஇஓ-வாக மோஹித் ஜோஷி 2023 டிசம்பர் மாதம் தலைமையேற்ற பின்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் டிசிஎஸ், ஹெச்சிஎல் காட்டிலும் அதிகமான லாபம் மற்றும் வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளாது டெக் மஹிந்திரா.
செப்டம்பர் காலாண்டில் டெக் மஹிந்திராவின் லாபம் வருடாந்திர அடிப்படையில் 32.7 சதவீதம் உயர்ந்து 1,585.6 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் 15.6 சதவீதம் உயர்ந்து 16,180.2 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இக்காலாண்டில் டிசிஎஸ் லாபம் 15 சதவீதமும், ஹெச்சிஎல் 21 சதவீதமும் உயர்ந்துள்ள நிலையில் டெக் மஹிந்திராவின் லாப வளர்ச்சி 32.7 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications