இந்தியா ஐடி சேவை துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா, விப்ரோ நிறுவனத்தை போலவே இன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் டெக் மஹிந்திரா சுமார் 1,465 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் பதிவான 1140.6 கோடி ரூபாயை ஒப்பிடுகையில் சுமார் 28 சதவீத வருடாந்திர லாப வளர்ச்சியையும், காலாண்டு அடிப்படையில் 8 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது டெக் மஹிந்திரா.

இதேவேளையில் வருவாய் அடிப்படையில் பார்த்தால் 18 சதவீத வருடாந்திர வளர்ச்சி உடன் 15,712 கோடி ரூபாய் பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டில் 13,351 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதோடு EBIT அளவு கடந்த ஆண்டை காட்டிலும் 53 சதவீதம் உயர்ந்து 15,712 கோடி ரூபாயாக உள்ளது.
இக்காலாண்டில் டெக் மஹிந்திரா 1.078 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய திட்டங்களை பெற்றுள்ளது, இது கடந்த ஆண்டை காட்டிலும் 33 சதவீதம் அதிகமாகும்.
இதை தொடர்ந்து ஜூன் காலாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 863 பேர் குறைந்துள்ளனர், இதனால் மொத்த ஊவியர்கள் எண்ணிக்கை 1.47 லட்சமாக உள்ளது. மேலும் அட்ரிஷன் விகிதம் 11.8 சதவீதமாக உள்ளது.
டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ மோஹித் ஜோஷி பேசுகையில் கடந்த 3 காலாண்டுகளாக 1 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை கைப்பற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும் நிறுவனம் தொடர்ந்து ஏஐ போன்ற எதிர்கால தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா பங்குகள் 1 சதவீதம் உயர்ந்து 1,510 ரூபாய் விலையில் வர்த்தகமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications