ஹைதராபாத்: தெலுங்கானா மாநில அரசு, அதானி குழுமத்திடமிருந்து யங் இந்திய ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்தை (Young India Skills University) நிறுவுவதற்காக வழங்கப்பட்ட ரூ.100 கோடி நிதியை நிராகரித்துத் திருப்பி அளித்துள்ளது. அமெரிக்கக் குற்றவியல் துறை, கௌதம் அதானி மற்றும் அவரது குழுமத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கக் குற்றவியல் துறை வழக்குத் தொடுத்த 24 மணிநேரத்தில் கென்யா அரசு 2 முக்கிய திட்டத்தை மொத்தமாக ரத்து செய்து, அதானி குழுமத்தை மொத்தமாக அந்நாட்டை விட்டு வெளியேற்றும் அளவுக்கு நிலை உருவானது. இந்த நிலையில் அதானி குழுமம் செயல்படும் பிற நாடுகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதல் முறையாக இந்தியாவில் அதானி குழுமத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அதானி குழுமத்தின் 2100 கோடி ரூபாய் மதிப்பிலான லஞ்ச வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருப்பது ஆந்திர மாநில அரசு அதிகாரிகளாக இருக்கும் வேளையில், இதன் அண்டை மாநிலமான தெலுங்கானா அரசு 100 கோடி ரூபாய் நன்கொடையைத் திருப்பி அளித்துள்ளது.
கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி, கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், யங் இந்திய ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்தை (Young India Skills University) நிறுவுவதற்காக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு ரூ.100 கோடி காசோலையை வழங்கினார்.
இந்த நிலையில் அதானி குழுமத்தின் சமீபத்திய வழக்குகள் இந்திய கார்ப்ரேட் துறையில் பூதாகாரமாக வெடித்திருக்கும் இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நிறுவன நன்கொடைகள் குறித்த நிலைப்பாட்டின் காரணமாக, தெலுங்கானாவில் அமைந்துள்ள காங்கிரஸ் அரசு இந்த 100 கோடி ரூபாய் நிதியைத் திருப்பித் தர முடிவு செய்துள்ளது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இதுகுறித்து கூறுகையில், தெலுங்கானா அரசு அதானி குழுமம் உட்பட எந்தவொரு நிறுவனத்திடமிருந்தும் யங் இந்திய ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்தை (Young India Skills University) நிறுவுவதற்காக நிதி அல்லது நன்கொடை பெறவில்லை என்று தெளிவுபடுத்தினார். அத்தகைய திட்டங்களுக்கு வெளிப்படையான மற்றும் போட்டித்திறன் மிக்க ஏல முறையின் வாயிலாகவே நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசானாலும் சரி, மாநில அரசானாலும் சரி எந்தொரு திட்டத்திற்கும் டென்டர் வாயிலாக திட்டத்தை நிறைவேற்றுவது முக்கியம். இந்த ஏலம் ஜனநாயக முறையில் நடத்தி, டென்டர்கள் வழங்கப்பட வேண்டும். அது அம்பானி, அதானி, டாடாவாக இருந்தாலும் சரி இந்த முறையைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து தான் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதானி குழுமம் கொடுத்த 100 கோடி ரூபாய் நிதியை திருப்பி கொடுத்தார். இதுகுறித்து தெலுங்கானா மாநிலத்தின் தொழிற்துறை ஊக்க பிரிவின் சிறப்பு தலைமை செயலாளர் ஜெயேஷ் ரஞ்சன், அதானி பவுண்டேஷன் தலைவர் ப்ரீத்தி அதானிக்கு 100 கோடி ரூபாய் நன்கொடை நிதியை நிராகரித்தது குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications