மியூச்சுவல் ஃபண்டுகள் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள் நீண்ட கால அடிப்படையில் செய்யும் முதலீடுகளுக்கு எதிர்ப்பார்க்காத லாபத்தை அள்ளித்தருபவை. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சம் ரூபாய் முதலீட்டை 7.66 லட்சமாக உயர்த்தியுள்ளது.
மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்டு: மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் பெரும்பாலான திட்டங்கள் நல்ல லாபத்தை தரக்கூடியவையாக இருக்கின்றன. இந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் திட்டமான மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

தரமான மிட்கேப் நிறுவனங்களில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து லாபம் ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு என கொண்டு வரப்பட்டது தான் மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்டு. இந்த திட்டத்தின் கீழ் 8,490 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி மேலாண்மை செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தில் 6.09 லட்சம் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர் என்றும் சுமார் 185 நகரங்களை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தில் நம்பிக்கை வைத்து முதலீடு செய்து லாபம் கண்டுள்ளனர் என்றும் மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் எஸ்ஐபி முறையில் 10 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை 3.2 லட்சம் ஆகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் மகாராஷ்ட்ரா, ஆந்திரா, டெல்லி, குஜராத், மேற்கு வங்கம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு 7.66 லட்சம் ரூபாய் என ரிட்டர்ன்ஸ் கிடைத்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிஃப்டி மிட்கேப் 100 இண்டெக்ஸ் கடந்த 10 ஆண்டுகளில் 20.3% ரிட்டர்ன்ஸ் கொடுத்துள்ளது. அதாவது சவாலான காலங்களிலும் மிட் கேப் நிறுவன பங்குகள் சிறந்த லாபத்தை தந்துள்ளன என்றும் அதுவே இந்த நிதியின் வெற்றிக்கு காரணம் என்றும் மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயர்தரமான நிறுவனங்களில் முதலீடு செய்து முதலீட்டாளர்களுக்கு சிறந்த வளர்ச்சியை தருவது தான் நோக்கம் என்று மோதிலால் ஓஸ்வால் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் செயல் இயக்குநர் பிரதீக் அகர்வால் தெரிவித்துள்ளார், அந்த ஃபார்முலா தற்போது வெற்றியை தந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மிட்கேப் நிறுவனங்கள் நீடித்த வளர்ச்சியை கொடுப்பவை என்றும் , 2004ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனங்கள் வளர்ச்சி பாதையில் தான் சென்று கொண்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். வருங்காலத்திலும் மிட்கேப் நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் அவற்றில் முதலீடு செய்வது லாபத்தை தரும் என்றும் கூறியுள்ளார்.
Story Written By: Devika


Click it and Unblock the Notifications