இந்திய பங்குச் சந்தை ஜூலை 10ஆம் தேதி வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு கணிசமான விற்பனையை எதிர்கொண்டு 120.85 புள்ளிகள் இழந்து 25,355.25 புள்ளிகளில் முடிவடைந்தது. ஜூலை 11ஆம் தேதி வர்த்தகமும் சரிவுடன் துவங்கியது முதலீட்டாளர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்திருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் இன்று எந்த பங்குகளை வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 11.00 மணியளவில் 650 புள்ளிகள் வரையில் சரிந்து 82,551.33 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 182 புள்ளிகள் வரையில் சரிந்து 25,173.10 புள்ளிகளை எட்டியுள்ளது சந்தை முதலீட்டாளர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிஃப்டி 50 தாண்டி நிஃப்டி வங்கி குறியீடும், தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வருவது உள்நாட்டு முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் பன்னாட்டு முதலீட்டாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில், இந்தியா VIX குறியீடு 2.24% குறைந்து 11.67 ஆக முடிவடைந்தது, இன்று இந்தியா விக்ஸ் குறியீடு 11.72 ஆக உயர்ந்துள்ளது, ஆனாலும் 15 என்ற ஆபத்தை உணர்த்தும் அளவீட்டிற்கு கீழ் உள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு 2வது நாளாக சரிவை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு ஏற்ற பங்குகளை சாய்ஸ் புரோக்கிங்கின் நிர்வாக இயக்குநர் சுமீத் பாகடியா பரிந்துரைத்தார்.
நேற்றைய (ஜூலை 10ஆம் தேதி) வர்த்தகத்தில் இந்தியா VIX 2.24% குறைந்து 11.6725 ஆக இருப்பது, சந்தையில் ஏற்ற இறக்கங்கள் குறைவாகவும், ஒப்பீட்டளவில் நிலையான முதலீட்டு சூழ்நிலை இருப்பதைக் குறிக்கிறது. இந்த சூழலில், சுமீத் பாகடியா பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (பிஎஃப்சி) மற்றும் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம்) ஆகிய இரண்டு பங்குகளை முதலீடு செய்ய பரிந்துரைத்தார்.
பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (PFC):
எந்தொரு பங்குகளை வாங்குவதாக இருந்தாலும் முதலில் தொழில்நுட்ப பகுப்பாய்வு செய்து, அதை தற்போதைய சந்தை நிலவரங்களுக்கு பொருத்தி பார்த்து ஏற்புடைதாக இருக்கிறதா என்பதை கருத்தில் கொண்டு அதன் பின்பே வாங்க வேண்டும். அந்த வகையில் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (பிஎஃப்சி) பங்கு, தற்போது 429.45 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது.
இந்த பங்குகள், வலுவான உயர்வை வெளிப்படுத்தி, தற்போது ஒரு சமச்சீர் முக்கோண வடிவத்திலிருந்து (symmetrical triangle pattern) இருந்து பிரேக்அவுட் ஆகும் நிலையில் உள்ளது. 436 ரூபாய் என்ற முக்கிய எதிர்ப்பு நிலையை உடைத்தால், இந்த பங்கு தற்போதைய உயர்வின் போக்கு தொடரும்.
PFC பங்கு, 20, 50, 100, மற்றும் 200 நாள் எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ்களுக்கு (EMA) மேலே வர்த்தகமாகி, விலை உயர்வின் வலிமையை உறுதிப்படுத்துகிறது. மேலும் முதலீட்டாளர்கள் முக்கியமான அளவிடும் RSI குறியீடு 60.04 ஆக உயர்ந்து, BUY தரத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் முதலீட்டளர்கள் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (PFC) பங்குகளை வாங்க விரும்பினால் 421 ரூபாய் என்ற உடனடி ஆதரவு நிலை உள்ளது. இதேபோல் 414 ரூபாயில் ஸ்டாப்-லாஸ் வைத்து, 460 ரூபாய் என்ற டார்கெட் விலையை நோக்கி முதலீடு செய்யலாம் என்று சுமீத் பாகடியா பரிந்துரைத்தார்.
ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (Paytm):
ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம்) பங்கு, 940.55 ரூபாயில் வர்த்தகமாகி வந்தாலும் இன்றைய வர்த்தகத்தில் 1.55 சதவீதம் சரிந்து 925.95 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது. ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் தனது 907 ரூபாய் என்ற முக்கிய ஆதரவு நிலையில் இருந்து பங்கு மீண்டு, வலுவான உயர்வை பதிவு செய்துள்ளது. இந்த பங்கு, 20, 50, மற்றும் 200 நாள் EMAகளுக்கு மேலே வர்த்தகமாகி, ஏற்ற போக்கின் வலிமையை உறுதிப்படுத்துகிறது.
இப்பங்கின் RSI 60.13 ஆக இருப்பது, மேலும் உயர்வுக்கு இடமளிக்கும் உந்தத்தை குறிக்கிறது. 952 ரூபாயில் உள்ள எதிர்ப்பை கடந்தால், புதிய முதலீட்டு வாய்ப்புகள் தோன்றலாம். 907 ரூபாயில் ஸ்டாப்-லாஸ் வைத்து, 1010 ரூபாய் இலக்கை நோக்கி முதலீடு செய்யலாம் என்று சுமீத் பாகடியா அறிவுறுத்தினார்.


Click it and Unblock the Notifications