பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) விதிமுறைகளின்படி, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் குறைந்தபட்சம் 25 சதவீத பப்ளிக் பங்கு மூலதனத்தை (எம்பிஎஸ்)பராமரிக்க வேண்டும். அதாவது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளில் அதிகபட்சம் 75 சதவீத பங்குகளை மட்டுமே நிறுவனம் வைத்திருக்க வேண்டும். எஞ்சிய 25 சதவீத பங்குகளை பொது மக்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். 2024 ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் 25 சதவீத எம்பிஎஸ் விதியை நிறைவு செய்ய வேண்டும் என்று செபி நிபந்தனை விதித்து இருந்தது.
அதேசமயம், பொதுத்துறை வங்கிகளுக்கு விதியை நிறைவு செய்வதற்கு 2026 ஆகஸ்ட் வரை செபி கால அவகாசம் வழங்கியுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 12 பொதுத்துறை வங்கிகளில், எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 7 வங்கிகளும் செபியின் 25 சதவீத எம்பிஎஸ் விதிமுறையை பூர்த்தி செய்து விட்டன. தற்போது, யூகோ வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய 3 வங்கிகளும் எம்பிஎஸ் விதிமுறையை நிறைவு செய்யும் வகையில் பங்குகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தகவல்.

தற்போது யூகோ வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய 3 வங்கிகளிலும் மத்திய அரசு 95 சதவீதத்துக்கு மேல் பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. எஞ்சிய பங்குகள் பொது முதலீட்டாளர்கள் வசம் உள்ளது. எனவே இந்த 3 பொதுத்துறை வங்கிகளும் அடுத்த நிதியாண்டில் நிதி நிறுவனங்களுக்கு பங்குகளை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல், இந்த பங்கு விற்பனை வாயிலாக அந்த வங்கிகளுக்கு மூலதனம் கிடைத்த மாதிரியும் இருக்கும், செபியின் விதிமுறையை பூர்த்தி செய்த மாதிரியும் இருக்கும்.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் இன்னும் செபியின் விதிமுறையை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தகவல். தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசுக்கு பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 79.60 சதவீதமும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 93.08 சதவீதமும், யூகோ வங்கியில் 95.39 சதவீதமும், பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் 98.25 சதவீதமும் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 96.38 சதவீதமும் பங்கு மூலதனம் உள்ளது. செபியின் எம்பிஎஸ் விதிமுறையை பூர்த்தி செய்ய, தற்போதைய பங்கு விலையில் இந்நிறுவன பங்குகளை விற்பனை செய்தால் மத்திய அரசுக்கு ரூ.50,000 கோடி கிடைக்கும். அதில், இந்தியன் ஓவர்சீஸ் பங்கு விற்பனை வாயிலாக மட்டுமே ரூ.20,000 கோடி வருமாம்.
Story Written by: Subramanian


Click it and Unblock the Notifications