சென்னை: இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் தொடங்கி இருக்கிறது. எனவே தான் அமேசான் , பிளிப்கார்ட் நிறுவனங்கள் பண்டிகை கால தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. பொதுவாகவே செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்த பண்டிகைகள் வரும். எனவே புதிய துணிகள், நகைகள் என மக்களின் வாங்கும் போக்கும் அதிகரிக்கும்.
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் குறிப்பிட்ட மூன்று துறைகளை சார்ந்த பங்குகளின் மதிப்பு அதிகரிக்கும் என முதலீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்க்கெட் ஸ்மித் இந்தியா நிறுவனத்தின் தலைவரான மயூரேஸ் ஜோசி எக்னாமிக் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் பண்டிகை காலம் தொடங்கி இருப்பதால் இனி ட்ரெண்ட், ஆதித்யா பிர்லா ஃபேஷன் , ரேமன்ட் லைப்ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு கணிசமான அளவு உயரும் என தெரிவித்துள்ளார். மேலும் தங்கம் மற்றும் நகைகள் சார்ந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பும் உயரக்கூடும் என கணித்துள்ளார்.
அடுத்தடுத்து நவராத்திரி திருவிழா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர இருக்கின்றன. எனவே அடுத்த சில மாதங்களுக்கு ஆடை, ஆபரணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என மயூரேஸ் ஜோசி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஆடை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் நகை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களில் நல்ல லாபத்தை பார்க்கும் எனவும் இதன் காரணமாக அந்த நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் உயரும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலம் மட்டுமின்றி திருமணங்களும் அதிக அளவில் நடைபெறும் என்பதால் முதலீட்டாளர்கள் நிச்சயமாக ட்ரெண்ட், ஆதித்யா பிர்லா ஃபேஷன், ரேமண்ட் லைப் ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்ளின் பங்குகளை வாங்கலாம் என்றும் தங்கம் மற்றும் நகை விற்பனை நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளார்.
பொதுவாகவே ஒரு ஆண்டின் இரண்டாவது பாதியில் மக்களின் நுகர்வு அதிகரிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் இதனை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டு உத்திகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தற்போது பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஆடை மற்றும் ஆபரண சில்லறை விற்பனை கடைகளை பெரிய நகரங்கள் மட்டும் இல்லாமல் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தி வருகின்றன.
எனவே அடுத்த சில மாதங்களில் இந்த நிறுவனங்களின் வருமானமும் லாபமும் படிப்படியாக உயரும் . இதனை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்தால் கணிசமான லாபத்தை காண முடியும் என பரிந்துரை செய்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications