அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 18 அன்று வட்டி விகிதத்தைக் குறைக்க உள்ளது. இதில் 50 அடிப்படை புள்ளிகள் குறைப்பு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட அளவில் தான் இருக்கும் என்று கூறப்பட்டாலும், இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.
நுவமா ரிசர்ச் அறிக்கையின் படி, வட்டி விகித குறைப்பு பெரும்பாலும் சந்தையில் ஏற்கனவே கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், வட்டி விகித குறைப்பு மற்றும் பங்குச் சந்தை வர்த்தகங்கள் இடையேயான வரலாற்று வர்த்தக உறவுச் சிக்கலானது. 2001, 2007-2008 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த வட்டி விகித குறைப்புகள் வெவ்வேறு சந்தை போக்கை வழிவகுத்துள்ளன.

2007-2008 ஆம் ஆண்டின் வட்டி விகித குறைப்பு, பெரிய மந்த நிலைக்கு முன்னதாக நடந்து, அமெரிக்கப் பங்குச் சந்தைக்கு பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு மற்றும் லெஹ்மன் பிரதர்ஸ் நிறுவனத்தின் திவாலானது ஆகியவற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலக சந்தைகளைப் பெரிதும் பாதித்தது.
2008 பொருளாதார நெருக்கடிக்குப் பதிலளிக்கும் விதமாக, ஃபெடரல் ரிசர்வ் வங்கி, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்காக வட்டி விகிதத்தைக் குறைத்தது. ஆனாலும் பொருளாதார நெருக்கடி மிகவும் தீவிரமாக இருந்ததால், இந்த வட்டி விகித குறைப்பு நடவடிக்கைகளும் நீண்ட கால மந்த நிலையைத் தடுக்க முடியவில்லை.
அமெரிக்காவில் மந்த நிலை ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. டிசம்பர் 2024க்குள் பொருளாதார மந்த நிலை ஏற்படும் வாய்ப்பு 62.9% ஆக உள்ளது, இது நவம்பர் 2024 இல் 51.84% ஆக இருந்தது.
இந்த நிலையில் டாடா அசெட் மேனேஜ்மெண்டின் நிலையான வருமானம் பிரிவின் தலைவர் மூர்த்தி நாகராஜன் பேசுகையில், சந்தையில் அனைத்து தரப்பினரும் பெரிய அளவிலான வட்டி விகித குறைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பொருளாதாரப் போக்கிற்கான FOMC உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளைச் சந்தை கவனமாகக் கண்காணிக்கும்.
வரலாற்று ரீதியாக, அமெரிக்காவில் வட்டி விகித குறைப்பு நடக்கும் போது டாலர் மதிப்பு பலவீனமடைவதற்கும், எமர்ஜிங் நாடுகளில் பங்குச்சந்தை முதலீடுகள் அதிகரிக்கும், பொருட்களின் விலை உயர்வதற்கும் வழிவகுத்தது.
ஆனால், தற்போதைய உலகப் பொருளாதார நிலைமை மாறுபட்ட நிலையைக் கொண்டுள்ளதாக நாகராஜன் எச்சரிக்கை விடுக்கிறார். சீனாவில் நடக்கும் மந்த நிலை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா போன்ற பிற வளர்ந்த நாடுகளில் வட்டி விகித குறைப்பு நடப்பது டாலர் பலவீனமடைவதைக் கட்டுப்படுத்தலாம்.
25 அடிப்படை புள்ளிகள் விகித குறைப்பு சந்தையை மந்தமாகப் பாதிக்கலாம். மாறாக, 50 அடிப்படை புள்ளிகளாக வட்டி விகிதம் குறைத்தால் பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதாகக் கருதப்பட்டு முதலீட்டுச் சந்தை பாதிப்பை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications